23 முஹர்ரம் 1434 (அ) 07 டிசம்பர் 2012 அன்று கூறப்பட்ட கருத்துக்களின் சுருக்கம்…
இடம்       : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : இலகுவான சொல் மற்றும் செயல் மூலம் பாவமன்னிப்புப்பெறல்
இமாம்      :  அப்துல் முஹ்ஸின் அல்காஸிம்.

இமாம் அப்துல் முஹ்ஸின் அல்காஸிம் அவர்கள் 'இலகுவான சொல் மற்றும் செயல் மூலம் பாவமன்னிப்புப்பெறல்' எனும் தலைப்பில் பாவமன்னிப்பு மற்றும் அதற்கான காரணிகளை எடுத்துக் கூறியதுடன், பாவமன்னிப்புக்குக் காரணமாக இருக்கக்கூடிய சொல் மற்றும் செயல் ரீதியான பல நல்அமல்களை உதாரணமாக எடுத்துரைத்தார்கள்.


புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே ! ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர்,தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக.
o    3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

      மனித , ஜின் வர்க்கத்தினை தன்னை வணங்குவதற்காக அல்லாஹ் படைத்துள்ளான். அல்லாஹ்வுக்கு வழிப்பட்டவர்களுக்கு சுவர்கத்தையும், மாறு செய்தவர்களுக்கு நரகத்தையும், வாக்களித்துள்ளதுடன், கணக்கறிக்கையை தன்வசமே வைத்துள்ளான்.
o    99:8. அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.

பாவங்களின் வகைகள்

அடியார்களுடைய பாவங்கள் பல வகைகள் ஆகும்.
1--மலைகளைப் போன்றவை.
o    ((மறுமை நாளில் முஸ்லிம்களில் சிலர் மலைகளைப் போன்ற பாவங்களை சுமந்துகொண்டுவருவார்கள்.)) நபிமொழி – முஸ்லிம்.

2-கடல் நுரையளவைப் போன்றவை.
o    நீண்ட நபிமொழியிலிருந்து .... ((கடல் நுரையளவு இருந்தாலும் அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படும்.))

3-உள்ளம் சாரந்த பாவங்கள்.
உதாரணமாக…

o    அல்லாஹ் அல்லாதவரகள் மூலம் நன்மை தீமை உண்டாகும் என எண்ணுதல்.
o    அல்லாஹ்வின் மீது பரம் சாட்டுவதில் பலவீனம்.
o    தற்பெருமை.
o    பொறாமை.

4-சொல் சார்ந்த பாவங்கள்.
உதாரணமாக…

o    மரணித்தவர்களிடம் பிரார்த்தித்தல்.
o    அல்லாஹ் அல்லாதவைகளிடம் சத்தியம் செய்தல்.
o    பொய் பேசுதல்
o    புறம் பேசுதல்.

5-செயல் சார்ந்த பாவங்கள்.
உதாரணமாக…
o    கப்ர் (மண்ணறை)களை தவாப் எனும் வலம் வருதல்.
o    கொலை செய்தல்.
o    களவு எடுத்தல்.
o    விபச்சாரம் செய்தல்.

பாவமன்னிப்பிற்கான காரணிகளில் சில .....

இணைவைத்தல் எனும் பாவம்
      இணைவைத்தல் எனும் பாவத்தை தவ்பா எனும் பாவமன்னிப்புவேண்டுதல் மூலம் அல்லாஹ் மன்னிப்பான்.மன்னிப்பு இல்லாமல் அதே நிலையில் மரணிப்பவன் நிரந்தரமாக நரகில் இருப்பான்.

பெரும்பாவம்
      பெரும் பாவங்களை தவ்பா எனும் பாவமன்னிப்புவேண்டுதல் மூலம் அல்லாஹ் மன்னிப்பான். பெரும் பாவங்களை செய்தவர் தவ்பா செய்யாத நிலையில் மரணித்தால் மறுமையில் அல்லாஹ்வில் பொருப்பில் விடப்படுவார். அல்லாஹ் நாடினால் தண்டிப்பான் அல்லது மன்னிப்பான். 

      இக்லாஸ் எனும் தூய எண்ணமும் ஸித்;க் எனும் உண்மையுடன்; உறுதியான நிலையில் செய்யப்படும் ஸாலிஹான நல்அமல்கள் மூலம் சில நேரம் பாவங்கள் மன்னிக்கப்படும். உதாரணமாக பாவியான ஒரு பெண் தாகித்த நாய்க்கு நீர் புகட்டியதன் காரணமாக பாவவிமோசனம் பெற்றது.

சிறுபாவம்
      சிறிய பாவங்களுக்கான பாவவிமோசனமாவன- உண்மையான நம்பிக்கை மற்றும்  சொல், செயல் ரீதியான நல்ல செயல்களாகும்.
பெரிய பாவங்கள் தவிர்க்கப்படும் போது  சிறிய பாவங்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப்படும்.
o    4:31. நீங்கள் தடுக்கப்பட்டுள்ளவற்றில் பெரும் பாவங்களை தவிர்த்து கொண்டால் உங்களுடைய குற்றங்களை நாம் மன்னிப்போம். உங்களை மதிப்புமிக்க இடங்களில் புகுத்துவோம்.
     இதற்கான இப்னு கதீர் றஹ்மதுல்லாஹ் அவர்கள் விளக்கம்  :-  '' எம்மால் தடுக்கப்பட்ட பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளும் போது சிறிய பாவங்களை மன்னித்து உங்களை சுவர்க்கத்தில் நுழையவைப்போம்.

 

      பாவங்களை மன்னிக்கக்கூடிய அருளாளன் அல்லாஹ் இரவில் பாவம் செய்தவன் பாவமன்னிப்பு பெறுவதற்காக பகலில் அவனது வாசலையும் பகலில் பாவம் செய்தவன் பாவமன்னிப்பு பெறுவதற்காக இரவில் அவனது மன்னிப்பு வாசலையும் திறந்துவைத்துள்ளான்.
o    4:27. மேலும் அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.

•ஆதமுடைய மகன் செய்யும் பாவம் அதிகரித்த போதும் அதனைவிட அதிகமாக அல்லாஹ்வுடைய அருள் அவனது அடியார்கள் மீது விரிந்துள்ளது.
•அவர்களது பாவங்கள் மன்னிக்கப்படவேண்டுமென்பதற்காக  அல்லாஹ் பல வணக்கங்களையும் அறிமுகம் செய்துள்ளான். உண்மையான கலப்படமற்ற தவ்ஹீத் எனும் ஏகத்துவம் பாவமன்னிப்பிற்கான காரணியாகும்.
o    ((... எனக்கு இணைவைக்காத நிலையில் இந்தப்பூமியின் நிறையளவுக்குப் பாவம் செய்திருந்தாலும் அதேயளவு மன்னிப்பை வழங்குவேன்.)) ஹதீஸ் குத்ஸி – முஸ்லிம்.

•தவ்ஹீத் எனும் ஏகத்துவத்தின் மகிமை அல்லாஹ்விடத்தில் மிகவும் வலிமையானது.

வாரத்தில் இரண்டு நாட்களில் பெரும்பாவங்களையும், இணைவைத்தலையும் தவிர்ந்து கொள்ளக்கூடிய ஒவ்வொரு முஸ்லிமுடைய பாவங்களையும் அல்லாஹ் மன்னிக்கிறான்.

o    (( திங்கள் - வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களிலும் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படும். மேலும் அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுடைய பாவங்களும் மன்னிக்கப்படும். ஆனால் இரு சகோதரர்களுக்கு மத்தியில் பகைமை வைத்துக்கொண்டவரைத்தவிர. அவ்விருவரும் சமாதானமாகும் வரைக்கும் எதிர்பாருங்கள் எனக்கூறப்படும். )) நபிமொழி – முஸ்லிம். 
தொழுகை மகிமையும், முக்கியத்துவமும் நிறைந்தது. அதனுடைய சொல், செயல் மற்றும் அதனை நிறைவேற்றல் போன்றவைகள் பாவமன்னிப்பிற்கான காரணியாகும்.

தொழுகைக்கான பாங்கு (அதான்) அழைப்பும் ஒரு காரணியாகும்.
o    (( எவர் அஷ்ஹது அன்ன முஹம்மதன் ரஸுலுல்லாஹ் என முஅத்தின் கூறக்கேட்டு  நானும் சாடசிகூறுகிறேன் எக்கூறி

''ரழீத்து பில்லாஹி ரப்பன் வபிமுஹம்மதின் ரஸுலன் வபில்இஸ்லாமி தீனன் ”

எனக்கூறுகிறாரோ அவரது பாவங்கள் மன்னிக்கப்படும்.)) நபிமொழி – முஸ்லிம்.

பொருள்:- (( நான் அல்லாஹ்வை இரட்சகன் அதிபதி என்றும், முஹம்மது நபியை தூதர் என்றும், இஸ்லாத்தை இறைமார்க்கம் என்றும் பொருந்திக்கொண்டேன்.))

அழகான முறையில் வுழு செய்வதன் மூலம் விழக்கூடிய சொட்டு நீர் அல்லது கடைசிச்சொட்டின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
o    ((முஸ்லிமான ஒரு மனிதன் அழகிய முறையில் வுழூ செய்து ஒரு தொழுகையை நிறைவேற்றினால் அவனது அந்தத்தொழுகைக்கும் அடுத்து வரக்கூடிய தொழுகைக்குமிடையில் உட்பட்ட பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்)) புகாரி,முஸ்லிம்.

•தொழுகைக்காக எடுத்துவைக்கும் ஒவ்வொரு எட்டு.

•வுழுவை பரிபூரணமாக நிறைவேற்றல்.

•அல்லாஹ்வின் இல்லமாம் பள்ளிவாயல்களுக்கான அதிகமான எட்டுக்கள்.

ஒரு தொழுகை முடிந்து இன்னுமொரு தொழுகையை எதிர்பார்திருத்தல்.
o    ((தொழுகையை எதிர்பார்த்து வுழுவுடன் பள்ளியில் இருக்கக்கூடியவனுக்காக அல்லாஹ்வின் வானவர்களான மலக்குமார்கள் யா அல்லாஹ் ! அவரது பாவத்தை மன்னித்து அவருக்கு அருள் புரிவாயாக !  என்று பிராத்திப்பார்கள்.))  புகாரி.  
o    இப்னு பத்தால் அவர்கள் கூறுகையில் : (( பாவங்கள் அதிகரித்த மனிதன் அதிலிருந்து அல்லாஹ்விடம் பாவமன்னிப்பை விரும்பினால் அவன் தொழுகையின் பின் பள்ளிவாயிலில் தொழுத இடத்தை தொடர்ந்து பற்றிப்பிடிக்கட்டும். இது வானவர்களின் பிரார்த்தனையின் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு உகந்த வழியாகும்.))

தொழுகையில் இமாமுடன் சேர்ந்து ஆமின் கூறுதல்.
o    ((இமாமும் மஃமூமும் சேர்ந்து ஆமீன் கூறுவது இது வானவர்களின் ஆமீனுடன் உடன்பட்டுவிட்டால் அவனது சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்)) புகாரி முஸ்லிம்.
o    (( இமாம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறியதும் மஃமூம் கூறும் அல்லாஹும்ம ரப்பனா லகல்ஹம்து  என்ற வாக்கியம் வானவர்களுடைய வாக்கியத்துடன் உடன்பட்டால் அவனது சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.)) புகாரி,முஸ்லிம்.

தொழுகைக்குப்பின் கூறக்கூடிய திக்ருகள்.
o    ((எவர் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னும் ஸுப்ஹானல்லாஹ் 33 தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33 தடவையும், அல்லாஹு அக்பர் 33 தடவையும், 100ஐ பூரணப்படுத்துவதற்காக லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு  லஹுல்முல்கு வலஹுல்ஹம்து வஹுவ அலாகுல்லி ஷைய்இன் கதீர். என்று கூறினால் அவனது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் அது மன்னிக்கப்படும்.)) முஸ்லிம்.  

ஐவேளைத்தொழுகை.
o    (( உங்களுடைய வீட்டுக்கு முன்னால் ஒரு நதி ஓடுகின்றது அதில் ஐந்து முறை நீராடினால் உடலில் அழுக்குகள் ஏதும் எஞ்சியிருக்குமா ? என நபியவர்கள் கேட்டதற்கு தோழர்கள் இல்லை எனப்பதிலளித்தார்கள். ஆம்.. அதுபோன்றுதான் ஐவேளைத்தொழுகையும்  பாவங்களை மன்னிக்கச்செய்யும் என்றார்கள். )) புகாரி,முஸ்லிம்.

வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்படும் ஜும்ஆத் தொழுகை.
o    ((ஒரு மனிதன் வெள்ளிக்கிழமை தனது சக்திக்குட்பட்ட முறையில் சுத்தமாகி, நீராடி, எண்ணைய் தேய்த்து, நறுமனம் பூசி, இருவர்களுக்கு மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தாத நிலையில் இமாமுடைய உபதேசத்தை செவிமடுத்திக் கேட்டு, தனக்கு கடமையான தொழுகையை நிறைவேற்றுவாராயின் இரண்டு வெள்ளிக்கிழமைகளுக்குட்பட்ட அவனது பாவங்கள் மன்னிக்கப்படும்.)) புகாரி.

ரமழான் மாத நோன்பு.
இது ஒரு ரமழானுக்கும் அடுத்த ரமழானுக்குமிடையில்  உள்ள பாவங்களுக்கு பெரும் பாவங்களை தவிர்ந்து கொள்ளுமிடத்து  குற்றப்பரிகாரமாக அமையும்.
o    (( எவர் இறைவிசுவாசத்துடன் நன்மையை எதிர்பார்த்தவாறு ரமழானில் நின்றுவணங்குகிறாரோ, அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். மேலும் எவர் இறைவிசுவாசத்துடன் நன்மையை எதிர்பார்த்தவாறு லைலதுல் கத்ர் இரவில் நின்று வணங்குகிறாரோ அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.)) புகாரி.

•அரபா நோன்பு.
 இது சென்ற மற்றும் அடுத்துவரும் ஆகிய இரண்டுவருட பாவங்களை மன்னிக்கச்செய்யும்.

ஆஷுரா நோன்பு.
இது சென்றவருடத்தின் பாவங்களை மன்னிக்கச்செய்யும்.

•தானதர்மம்.
o    (( தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று தர்மம்  பாவத்தை அணைத்துவிடும்.)) திர்மிதி. 

ஹஜ் செய்தல்
o    ((எவர் கெட்ட விடயம், மற்றும் ஆபாச விடயங்களில் ஈடுபடாமல் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறாரோ அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று மீண்டுவருகிறார்.)) புகாரி, முஸ்லிம்.

முஸ்லிம் சோதனைக்குட்படுத்தப்படல். 
o    (( எந்த ஒரு முஸ்லிம் கவலை, துன்பம், மனச்சோர்வு போன்றவைகளால் சோதனைக்குட்படுத்தப்பட்டால் அதன்மூலம் பாவங்கள் மன்னிக்கப்படும்.)) புகாரி, முஸ்லிம்.

•நன்மையை எவி தீமையைத் தடுத்தல்.

•தொழுகையை நிலைநாட்டல்.

•தர்மம் செய்தல்.

•நோன்பு நோற்றல்.

•அல்குர்ஆன் ஓதுதல்.

•பெற்றோருக்கு பணிவிடை செய்தல்.

•உறவினர்களை சேர்ந்து நடத்தல்.

o    11:114.  நிச்சயமாக நற்செயல்கள் தீச்செயல்களைப் போக்கிவிடும்.

o    ((பாவத்தைத் தொடர்ந்து நன்மை செய்வீராக அது அப்பாவத்தை அழித்துவிடும்.)) நபிமொழி – திர்மிதி.

இறை நினைவு எனும் திக்ர் செய்தல்.
o    (( எவர் ஸுப்ஹானல்லாஹ் என 100 விடுத்தம்  கூறுகிராரோ அவருக்கு 100 நன்மைகள் எழுதப்படும். 100 பாவங்கள் மன்னிக்கப்படும்.)) நபிமொழி முஸ்லிம்.
o    ((எவர் ஸுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி என ஒரு நாளைக்கு 100 விடுத்தம்  கூறுகிராரோ அவருடைய பாவம் கடல் நுரையளவு இருந்தபோதிலும் அது மன்னிக்கப்படும்.)) புகாரி, முஸ்லிம்.

உம்ரா செய்தல். 
o    ((ஒரு உம்ரா செய்து இன்னுமொரு உம்ரா செய்யும்போது இரண்டுக்குமிடைப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படும்.)) 

உயிரினங்களுக்கு இரக்கம் காட்டல்.
o    ((தாகித்த நாய்க்கு தண்ணீர் புகட்டிய பனூ இஸ்ரவேலைச் சேர்ந்த கெட்ட பெண்ணுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டது.)) புகாரி,முஸ்லிம்.

•பிறரை மன்னித்தல்.  
o    4:22. (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும்; அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன்; அன்பு மிக்கவன்.

•ஒன்று கூடலின் பின் அதற்குரிய திக்ரை ஓதுதல்.
o    ((எவர் ஒரு மஜ்லிஸில் அமர்ந்து, அதில் ஏதும் தவறுகள் ஏற்பட்டு பின்னர் '' ஸுப்ஹானக ரப்பினா வபிஹம்திக, லாஇலாஹ இல்லா அன்த, அஸ்தஃக்பிருக வஅதூபு இலைக'' (பொருள்;; : எங்கள் இறiவா ! உன்னைப் புகழ்வதுடன் துதிக்கவும் செய்கிறேன். உன்னைத்தவிர வணக்கத்துக்குரிய இறைவன் யாருமில்லை. உன்னிடம் பாவமன்னிப்பு கோருகிறேன். உன்னிடமே மீளுகிறேன்.)  என்று கூறுவதன் மூலம்  அவர் மஜ்லிஸில் இருக்கும்போது ஏற்பட்ட தவறுகள் மன்னிக்கப்படும்.)) நஸாஈ.
•உணவு உண்ட பின்னர் துஆ ஓதுதல்.

o    ((எவர் உணவு உட்கொண்ட பின்னர் '' அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஸகனீஹி மின் கைரி ஹவ்லின் மின்னீ வலாகுவ்வஃ -(பொருள் : எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே ! அவனே எனக்கு இந்த உணவை அளித்தான். என்னிடமிருந்து எவ்வித முயற்சியும் சக்தியுமின்றியே இதனை எனக்கு அருளினான்.) என்று கூறுகின்றாரோ அவருடைய முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும்.)) அபூதாவூத்.
•நோய்வாய்ப்படல்.
o    (( ஒரு முஸ்லிம் ஏமாற்றம், தீங்கு, விசனம், கவலை, மற்றும் காலில்  முள்ளின் மூலம் ஏற்பட்ட காயம் ஆகியவைகளால் சோதனைக்குள்ளாக்கப்படுவதனால் அவனது பாவங்கள் மன்னிக்கப்படும்.)) புகாரி முஸ்லிம். 
o    ((நோயின் மூலம் ஒரு முஸ்லிம் தாக்கப்படுவதால் மரத்திலிருந்து இலைகள் விழுவதைப்போன்று அவனது பாவங்கள் விழுத்தாட்டப்படும்.)) புகாரி – முஸ்லிம்.

•அறிவியல் ஒன்றுகூடல்கள். திக்ர் மஜ்லிஸ்கள்.

•உண்மையான பிரார்த்தனை.
o    ((நிச்சயமாக நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்யக்கூடியவர்கள். நான் உங்களது பாவங்களை மன்னிக்கக்கூடியவனாகும். என்னிடத்தில் பாவமன்னிப்புக்கோருங்கள் நான் உங்களது பாவங்களை மன்னிப்பேன்.)) முஸ்லிம்

•இரவில் கடைசிப்பகுதி.
o    ((இரவின் பகுதிகளில் மூன்றாம் பகுதியான இறுதிப்பகுதியில் அல்லாஹ் இவ்வுலக வானத்துக்கு இறங்கி, எவர் என்னிடம் பாவமன்னிப்புக் கோருகின்றாரோ நான் அவனது பாவத்தை மன்னிப்பேன் என்று ஒவ்வொரு இரவிலும் கூறுவான்.)) புகாரி முஸ்லிம்.

•தவ்பா எனும் பாவமன்னிப்புக் கோரல்.

      ஒரு மனிதனுடைய நாட்களில் சிறந்த நாள் பாவமன்னிப்புக்கோரும் நாளாகும்.

      தவறு செய்வதின் தாக்கமானது உடலிலும், செல்வத்திலும், குடும்பத்திலும் வெளிப்படும். ஒவ்வொரு அடியானும் தனது பாவங்களை அழிப்பதற்காக இரவிலும் பகலிலும் முயற்சிக்க வேண்டும்.

      அல்லாஹ்வுடைய அருள்கள் பாவத்தின் மூலம் இழக்கப்படும். பாவங்கள் சாபங்களை இழுத்துவரும்.
o    ((ஹஜருல் அஸ்வத் கல் சுவர்க்கத்திலிருந்து பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மனிதனின் பாவங்களின் மூலமாக அது கருத்துவிட்டது.)) நபிமொழி – திர்மிதி.

      அல்லாஹ் அருளாளன் அன்பாளன். பாவங்கள் மன்னிக்கப்படும் பல வழிமுறைகளை ஏற்படுத்தியுள்ளான். பாவமன்னிப்பு வேண்டி அவனது கதவு தட்டப்படும் போதெல்லாம் மன்னிப்பு வழங்குவதற்காக திறக்கப்படும்.
o    20:82. 'எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும் செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக இருக்கின்றேன்' (என்று கூறினோம்).

      பாவம் மிகவும் பாரதூரமானது, தவ்பா எனும் பாவமன்னிப்பை வேண்டாமலிருப்பது அதனை விட ஆபத்தானது. தவ்பாவின் வாசலை தட்டும்போது அதனை திறந்தநிலையில் பெற்றுக்கொள்வான். பாவமன்னிப்பு, பொதுவான மன்னிப்பு, மறைத்தல் போன்றவைகள் அல்லாஹ்வுடைய பண்புகளில் உள்ளதாகும். பாவம் செய்தவன் பாவமன்னிப்புக்கோரும்போது அல்லாஹ் மகிழ்வடைகின்றான். அவனது பாவங்களை நன்மைகளாக மாற்றுகின்றான். பாவங்களை விட்டு விடுவது, பாவமன்னிப்புக் கேட்பது இலகுவாகும். பாவத்தின் தடங்குகள் மனிதர்களைவிட்டும் மறைந்திருந்தாலும் அல்லாஹ் அதனை அறிந்து வைத்துள்ளான். சில வேளை பாவத்தின் அறிகுறிகள் மனிதனின் கஷ்டமான சிரமமான நேரங்களில் வெளிப்படும்.

அறிந்து கொள்ளுங்கள் ! நிச்சயமாக அல்லாஹ் நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறுமாறு கட்டளையிட்டுள்ளான். 

o    33:56. இந்த நபியின் மீது அல்லாஹ் அருள் புரிகிறான். மலக்குகளும் அவருக்காக அருளைத் தேடுகின்றனர். முஃமின்களே நீங்களும் அவர் மீது ஸலவாத்து சொல்லி அவர் மீது ஸலாமும் சொல்லுங்கள்.

சொல், செயல் சாரந்த நல்லமல்கள் செய்து பாவமன்னிப்புப் பெற்றவர்களாக நம்மனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக ! ஆமீன் .

0 comments:

Post a Comment

 
Top