09 முஹர்ரம் 1434 ஹி (அ) 23 நவம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…….
இடம்             : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு     : படிப்பினைக்குரிய மூஸா நபியின் வரலாறு.
இமாம்      :  அப்துல்பாரி அல்துபைதீ.

இமாம் அவர்கள் “படிப்பினைக்குரிய மூஸா நபியின் வரலாறு எனும் தலைப்பில்'' நிச்சயமாக நபிமார்களின் வரலாறுகளில் பல படிப்பினைகளும், உபதேசங்களும் உள்ளன. அது பயணத்துக்கான கட்டுச்சாதனமுமாகும். முஃமின்களை நிலைப்படுத்தக் கூடியதுமாகும் என உபதேசித்தார்கள். இவ்வரலாறுகளில் மூஸா நபியும் அவர்களுடன் இருந்தவர்களும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்ட வரலாற்றையும், பிர்அவ்னும் அவனது படைகளும் அழிக்கப்பட்ட வரலாற்றையும் எடுத்துக் கூறினார்கள். மேலும் இவ்வரலாறுகளின் மூலம் பெறக்கூடிய படிப்பினைகளில் சிலவற்றைத் தெளிவுபடுத்தினார்கள். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களையும் அவர்களது கூட்டத்தையும் பாதுகாத்த அத்தினத்தின் சிறப்பையும் அத்தினத்தில் நோன்பு நோற்பது பற்றி நபியவர்கள் ஆர்வமூட்டிய நபிமொழிகளையும் எடுத்துக்கூறினார்கள்.

 புகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே ! ஸலவாத்தும் ஸலாமும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தினர், தோழர்கள் அனைவர்கள் மீதும் உண்டாவதாக.

o    3:102. நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள்.

      நபிமார்களின் வரலாறுகளில் பல படிப்பினைகளும், உபதேசங்களும் உள்ளன. அது பயணத்துக்கான கட்டுச்சாதனமுமாகும். முஃமின்களை நிலைப்படுத்தக்கூடியதுமாகும்.
o    11:120. (நம்) தூதர்களின் வரலாறுகளிலிருந்து (இவை) யாவற்றையும் உம் இதயத்தைத் திடப்படுத்துவதற்காக உமக்குக் கூறினோம். இவற்றில் உமக்குச் சத்தியமும் நல்லுபதேசமும், முஃமின்களுக்கு நினைவூட்டலும் வந்து இருக்கின்றன.

      அல்குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாறுகளில் மிகவும் நீண்ட வரலாறு மூஸா நபியுடைய வரலாறாகும்.
      மூஸா அலைஹிஸ்ஸலாம் இவ்வுலகில் பிறக்கும்போது இருந்த சூழல் பயங்கரமானது. சமுகங்கள் சிதறுண்டு வலுவற்றவர்களாக இருந்தனர். பிர்அவ்னுடைய கடுமையான வேதனை மக்களைச் சூழ்ந்துகொண்டது. ஆண் மக்களை அறுத்துக் கொலை செய்தான். பெண்களை அவமானமாக வாழ வைத்தான். அவனுடைய சிம்மாசன அரசாட்சியைப் பாதுகாக்கும் பொருட்டு பிறக்கும் ஒவ்வொரு ஆண் குழந்தைகளையும் கொலை செய்தான். தனது சமுகத்தினரை கேவலப்படுத்தி, அடக்குமுறைக்குட்படுத்தி தனது ஆட்சியும் அதிகாரமும் நிலைத்திருப்பதற்காக சிறுவர்களின் மண்டை ஓடுகள், தகர்ந்து சின்னாபின்னமான உடல்கள், மற்றும் இரத்த வெள்ளத்தில் தனது அரசை பாதுகாக்க முயற்சித்தான்.
      அவனுடைய உள்ளத்திலிருந்து அன்பு, பாசம், கருணை, மனிதநேயம்,  முற்றுமுதாக வேரறுக்கப்பட்டுவிட்டது. இதனால் அல்லாஹ்வின் வாக்கு உறுதியாகிறது. அவனது அரசாட்சி இழக்கப்பட்டு கௌரவங்களை இழந்து இறுதி முடிவு மிகவும் கேவலமாக அமைந்தது.
o    28:7. நாம் மூஸாவின் தாயாருக்கு: 'அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக; அவர் மீது (ஏதும் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம். துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்' என்று வஹீ அறிவித்தோம்.

      அங்கே ஆச்சரியமான ஒரு நிகழ்வு.. மூஸா நபியின் தாய், மகனின் பிறப்பு பற்றி பிர்அவ்ன் அறிந்து விடுவானோ என்ற ஏக்கத்திலும், பயத்திலும் இருந்தவேளையில் அல்லாஹ்வுடைய கட்டளையின் படி ஆற்றில் விடப்பட்டு குழந்தை எந்தவித இன்னல்களுக்கும் உட்படாமல் பாதுகாக்கப்பட்டது.
      இதுபோன்ற பல ஆச்சரியமான நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது.  பிர்அவ்னுடைய பித்தலாட்டங்களும், சூழ்ச்சிகளும் அல்லாஹ்வுடைய சக்திக்கு முன் சரணாகதியானது. அவனோ பனூஇஸ்ரவேலர்களின் குழந்தைகளைக் கொலைசெய்கிறான். ஆனால் அதே பனூஇஸ்ரவேலர்களைச் சார்ந்த மூஸா நபியவர்களுக்கு பிர்அவ்னின் கோட்டையில் வாழும் சூழல் உருவாகிறது. பிர்அவ்னுடைய மனைவியின் உள்ளத்தில் குழந்தையின் பாலுள்ள அன்பை அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.
o    28:9. இன்னும்: (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ('இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்' என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை.

      அல்லாஹ் ஒருவருக்கு ஈடேற்றத்தை நாடிவிட்டால் எவரால் அதனைத் தடுக்கமுடியும். மூஸா நபியவர்களை பிர்அவ்னின் அரவணைப்பில் வாழவைப்பதற்கான சூழலை பிர்அவ்ன் மூலமே அல்லாஹ் ஏற்படுத்துகிறான்.

      மூஸா நபி அவர்களுக்கு பாலூட்டும் பல தாய்மார்கள் கொண்டுவரப்படுகிறது. ஆனால் குழந்தையோ பால்குடிக்க மறுக்கிறது. அதன் பின் சகோதரியின் மூலம் ஒரு பாலூட்டும் தாய் கொண்டுவரப்படுகிறாள்..  அதுதான் மூஸா நபியின் தாய்.
o    28:12. நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்: 'உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்.'
o    28:13. இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள்.
      இதுதான் அல்லாஹ்வுடைய வாக்கு. அவனது வாக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது.

எவர் அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கையை வளர்த்து அனுமதிக்கப்பட்ட காரணிகளை செய்கிராரோ அவர் ஒருபோதும்  அல்லாஹ்வுடைய உதவியை இழக்கமாட்டார்.  மாற்றமாக உறுதியும், சக்தியும் தன்னில் அதிகரிக்கும்.

-----------------------------------------------------------------------------------

பிர்அவ்னிடம் செல்லுமாறு அல்லாஹ்விடமிருந்து மூஸாவுக்கு கட்டளை வருகிறது. இது மிகவும் கடினமான பொறுப்பு. பிர்அவ்னோ தனக்குள் கடவுள் தன்மையை வாதாடுகிறான்.
o    20:24. 'ஃபிர்அவ்னிடம் நீர் செல்வீராக! நிச்சயமாக அவன் (வரம்பு) மீறி விட்டான்' (என்றும் அல்லாஹ் கூறினான்).

இங்கே மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அழைப்புக்கும், அழைப்பாளனுக்கும் இருக்கவேண்டிய அடிப்படையை பதிவுசெய்கிறார்கள்.
      ஒரு அழைப்பாளன் தனது சக்தியை மறந்து முழுமையாக அல்லாஹ்வைத் துதி செய்து அவனையே நினைவுகூர்வதன் மூலம் பொறுப்புகளை ஆரம்பம் செய்யவேண்டும். இதுதான் ஒரு அழைப்பாளன், வழிகாட்டுபவனின் கட்டுச்சாதனமுமாக இருக்கவேண்டும்.

o    20:25. (அதற்கு மூஸா) கூறினார்: 'இறைவனே! எனக்காக என் நெஞ்சத்தை நீ (உறுதிப்படுத்தி) விரிவாக்கி தருவாயாக!
o    20:26. 'என் காரியத்தை எனக்கு நீ எளிதாக்கியும் வைப்பாயாக!
o    20:27. 'என் நாவிலுள்ள (திக்குவாய்) முடிச்சையும் அவிழ்ப்பாயாக!
o    20:28. 'என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக!
o    20:29. 'என் குடும்பத்திலிருந்து எனக்கு (உதவி செய்ய) ஓர் உதவியாளரையும் ஏற்படுத்தித் தருவாயாக!
o    20:30. 'என் சகோதரர் ஹாரூனை (அவ்வாறு ஏற்படுத்தித் தருவாயாக)!
o    20:31. 'அவரைக் கொண்டு என் முதுகை வலுப்படுத்துவாயாக!
o    20:32. 'என் காரியத்தில் அவரைக் கூட்டாக்கி வைப்பாயாக!
o    20:33. 'நாங்கள் உன்னை அதிகமதிகம் (தஸ்பீஹு செய்து) துதிப்பதற்காகவும்;
o    20:34. 'உன்னை அதிகமதிகம் நினைவு கூர்வதற்காகவும் (இவற்றையெல்லாம் அருள்வாயாக!)
o    20:43. 'நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.
o    20:44. 'நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்; அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம்; அல்லது அச்சம் கொள்ளலாம்.'
o    'நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள்;

இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் மூஸா நபிக்கு செய்த கட்டளையானது... அழைப்புப்பணியின் போது  மென்மையான வார்த்தை, அமைதியான பேச்சு, தெளிவான விளக்கம், ஆதாரங்களின் அடிப்படையில் வாதிடல் போன்றவைகள் அமைந்திருத்தல் வேண்டும்.  அமைதியான கலந்துரையாடல் என்பது மார்க்கம் போதிக்கும் ஒழுக்கமும், தூதர்களின் வழிகாட்டலுமாகும்.
      கடுமையான வார்த்தைப்பிரயோகம், ஏசுதல், எச்சரிக்கை செய்தல், கூச்சலிடல், உள்ளத்தைக் காயப்படுத்துதல் இவைகள் மார்க்கத்தை விட்டும் தூரப்படுத்திவிடும். மேலும் மார்க்கத்தின் உண்மைத்தன்மையையும், சாந்தமான வழிமுறைகளையும் திரிவுபடுத்திவிடும். 
      அதே சமயம் மென்மை என்பதன் அர்த்தம் மாற்றார்களை கவர்ச்சிப் படுத்துவதற்காகவும், அவர்களை தம் பக்கம் மீட்டிக் கொள்வதற்காகவும் மார்க்கத்தின் அடிப்படைத் தன்மைகளிலும், சட்டவாக்கங்களிலும் விட்டுக்கொடுத்தல் என்பது அல்ல என்பதையும் ஞாபகம் கொள்ள வேண்டும்.
-------------------------------------------------------------------------------------
      பிர்அவ்ன் தனது சூனியக்காரர்களை ஒன்று கூட்டி  பகிரங்க விவாதத்தின் மூலம் மூஸா நபியை பொதுமக்களுக்கு மத்தியில் தலைகுனியச் செய்வதற்க்கு எண்ணுகிறான்.

o    20:60. அவ்வாறே ஃபிர்அவ்ன் திரும்பிச் சென்று (சூனியத்திற்கான) சூழ்ச்சிக்காரர்களை ஒன்று திரட்டிக் கொண்டு, மீண்டும் வந்தான்.
      விவாத அரங்கில் சூனியக்காரர்களெல்லாம் பிர்அவ்னின் அந்தஸ்தில் நம்பிக்கை கொணடவர்களாக மூஸாவுக்கு சதிசெய்வதற்காக ஒன்றுகூடுகின்றனர். அப்பொழுது மூஸா நபியவர்களுக்கு அல்லாஹ் சொல்கிறான்
o    20:68. '(மூஸாவே!) நீர் பயப்படாதீர்! நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்பீர்!'
நீர் பயப்பபடாதீர். நீர்தான் சங்கையாளன், மேன்மையாளன், உயர்ந்த அடிப்படைகளையுடையவன், பண்புகளிலும், கோட்பாடுகளிலும் சிறந்தவன் என நம்பிக்கையூட்டப்பட்டது.
மாயையும், பொய்யும் தலைவிரித்தாடும் போது எம்மில் உள்ளம் இளகியவர்களுக்கு தடம்புரளாமல் ஈமானில் உறுதியாக இருப்பதற்க்கு இது பெரிய படிப்பினையாகும்.
      பிர்அவ்ன் ஒன்றை நாடுகிறான், அல்லாஹ்வோ வேறொன்ரற நாடுகிறான். சூனியக்காரர்களுக்கு மத்தியில் அல்லாஹ்வுடைய நிரந்தர அத்தாட்சியும், அல்லாஹ்வுடைய கட்டளையும் பெரிய ஆச்சரியமாக வெளிப்படுகிறது.

o    7:120. அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து:
o    7:121. 'அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
o    7:122. 'அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்' என்று கூறினார்கள்.
      ஈமான் எனும் இறைவிசுவாசம் அவர்களது உள்ளங்களில் ஒளிமயமானது. உண்மையான கோட்பாடு வெற்றியடைந்தது. விவாத அரங்கு பிர்அவ்னுக்கு எதிரானது. மக்கள் பிர்அவ்னின் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாது அவனை எதிர்கொள்ள ஆயத்தமாகிவிட்டனர்.
o    20:72. (மனந்திருந்திய அவர்கள் ஃபிர்அவ்னிடம்) 'எங்களுக்கு வந்துள்ள தெளிவான அத்தாட்சிகளை விடவும், எங்களைப் படைத்தவனை விடவும் உன்னை (மேலானவனாக) நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம்; ஆகவே என்ன தீர்ப்புச் செய்ய நீ இருக்கிறாயோ அவ்வாறே தீர்ப்புச் செய்துகொள்; நீ தீர்ப்புச் செய்வதெல்லாம் இவ்வுலக வாழ்க்கையில் தான்' என்று கூறினர்.
      இந்த பகிரங்க விவாதத்தினூடாக பிர்அவ்ன் சாதாரண மனிதனாக மக்களுக்கு மத்தியில் காட்சியளிக்கிறான். அவன் எந்த நன்மைகள், தீங்குகள், மரணம், வாழ்வு, மீள் எழுப்புதல் போன்ற எதற்கும் சக்தியற்றவன்.
அல்லாஹ்வுடைய  திருப்பொருத்தத்தை நாடியவர்களாக அல்லாஹவிடம் பாவமன்னிப்புக் கோரி, முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து, இஸ்லாத்தின் பால் அழைக்கும் அழைப்பாளர்களாக சூனியக்காரர்களெல்லாம் மாறிவிட்டார்கள்.
o    20:74. நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது; அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
o    20:75. ஆனால், எவர்கள் முஃமினாக, ஸாலிஹான (நல்ல) செயல்களைச் செய்தவர்களாக அவனிடம் வருகிறார்களோ- அவர்களுக்கு மேலான பதவிகள் உண்டு.
      இது போன்ற நிகழ்வுகள் அபூர்வமானதல்ல. ஈமானிய இன்பத்தை சுவைக்கும்போது ஏனையவை அனைத்தும் சர்வசாதாரணமாகிவிடும்.
      சமகாலத்திலும்  வழிகேட்டில் இருந்தவர்கள் எத்தனையோ பேர் ஈமானிய சுவையை உணர்ந்ததின் காரணமாக நேர்வழியடைந்துள்ளனர்.
      பிர்அவ்னின் அகந்தையின் எல்லை வெற்றியை இழக்க ஆயத்தமானது. முஹர்ரம் மாதம் பத்தாவது நாள் மூஸாவும் அவர்களது கூட்டமும் பாதுகாக்கப்பட்டு பிர்அவ்னும் அவனைச் சார்ந்தவர்களும் மூழ்கடிக்கப்பட்டு அழிந்தனர்.
-      பிர்அவ்ன் அழிவை அன்மிக்கும் போது கூறினான் :-
o    10:90. மேலும், இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்க வைத்தோம்; அப்போது ஃபிர்அவ்னும், அவனுடைய படைகளும், (அளவு கடந்து) கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களைப் பின் தொடர்ந்தார்கள்; (அவனை மூழ்கடிக்க வேண்டிய நேரம் நெருங்கி) அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன்: இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது ஈமான் கொண்டுள்ளார்களோ, அவனைத் தவிர வேறு இறைவன் இல்லையென்று நானும் ஈமான் கொள்கிறேன்; இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவர்களில் (முஸ்லிம்களில்) ஒருவனாக இருக்கின்றேன்' என்று கூறினான்.
o    10:91. 'இந்த நேரத்தில் தானா (நீ நம்புகிறாய்)? சற்று முன் வரையில் திடனாக நீ மாறு செய்து கொண்டிருந்தாய்; இன்னும், குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.
o    10:92. எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு ஓர் அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம்; நிச்சயமாக மக்களில் பெரும்பாலோர் நம் அத்தாட்சிகளைப்பற்றி அலட்சியமாக இருக்கின்றார்கள்' (என்று அவனிடம் கூறப்பட்டது).

      சமுகத்தில் எல்லை மீறுபவர்கள் அனைவருக்கும் இது ஒரு படிப்பினையாகும்.

ஆஷுராநோன்பு

o    ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது சென்ற வருட பாவத்துக்கு குற்றப்பரிகாரமாகும். நபிமொழி நூல்- முஸ்லிம்.
      மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பைதுல் முகத்தஸ் பூமியை நேசித்தார்கள் . இன்று அந்தப்பூமி யஹுதிகளின் அடக்குமுறைக்கு உட்படுதத்தப்பட்டுள்ளது. எனவே அதனைப் பாதுகாப்பது முஸ்லிம்களின் தார்மீகக் கடமையாகும்.
      அண்மைய காஸாவுக்கான அநியாயம் நீடிக்கப்போவதில்லை.  அநியாயம் என்றும் நிலைத்ததில்லை. பிர்அவ்னுடைய ஆட்சி, அதிகார அநியாயம் கடுமையான போது அவனைத் தண்டித்து, மூழ்கடித்து உண்மையும் சத்தியமும் உரியவர்களிடம் மீண்டுவந்தது.
o    28:5. ஆயினும் (மிஸ்ரு) பூமியில் பலஹீனப் படுத்தப்பட்டோருக்கு நாம் உபகாரம் செய்யவும், அவர்களைத் தலைவர்களாக்கிவிடவும் அவர்களை (நாட்டுக்கு) வாரிசுகளாக்கவும் நாடினோம்.
o    28:6. இன்னும் அப்பூமியில் அவர்களை நிலைப்படுத்தி ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் இவர்களைப்பற்றி எ(வ் விஷயத்)தில் பயந்து கொண்டிருந்தார்களோ அதைக் காண்பிக்கவும் (நாடினோம்).

அல்குர்ஆனின் வரலாறுகளைப் படித்து படிப்பினை பெற்றவர்களாக எம்மை அல்லாஹ் ஆக்கியருள்வானாக. ஆமீன் !!! 

0 comments:

Post a Comment

 
Top