அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால் .....

நாள் – 12 முஹர்ரம் 1435 ஹி (அ) 15 நவம்பர் 2013

இமாம் :- அப்துல் முஹஸின் அல் காஸிம்.

தலைப்பு :- மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்று தஜ்ஜால்.

இடம் :- மஸ்ஜிதுந்நபவி மதீனா முனவ்வரா

இமாமவர்கள் மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்றான தஜ்ஜால் பற்றியும், அவனது பிரமாண்டமான குழப்பங்கள் பற்றியும் கூறினார்கள். மேலும் அல்குர்ஆனிலும் அல்ஹதீஸிலும் தஜ்ஜாலுடைய பண்புகள் மற்றும் அவனது நிலைமைகள் பற்றி வரக்கூடிய பல ஆதாரங்களை முன்வைத்ததுடன் அதிலிருந்து பாதுகாப்புப் பெறக்கூடிய வழிமுறைகளையும் தெளிவுபடுத்தினார்கள்.


       முதலாவதாக அல்லாஹ்வைப் புகழ்ந்து, நபியின் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவர்களாக ..... சமுகம் தந்தவர்களுக்கு அல்லாஹ்வை அஞ்சுவது பற்றிய தக்வாவைக் கொண்டு உபதேசம் செய்தார்கள். அல்லாஹ்வை அஞ்சியவன் நேர்வழி பெறுவான். அவன் பக்கம் மீள்பவன் அவனது அரவணைப்பையும், பாதுகாப்பையும் பெற்றுக்கொள்வான்.

       அல்லாஹ், இந்த சமூகத்தை இறுதிச் சமூகமாக ஆக்கியுள்ளான். இவர்களுடைய காலத்திலே மறுமை நாளின் அடையாளங்கள் வெளியாகுவதுடன், மறுமை நாளும் வெளியாகும்.
·         54:1. (இறுதி) நேரம் நெருங்கி விட்டது; சந்திரனும் பிளந்து விட்டது.
· நபியவர்கள் மறுமை நாள் பற்றிய செய்திகளைக் கூறும் போது அவர்களது இருகண்களும் சிவந்துவிடும், சத்தம் உயர்ந்துவிடும், எந்தளவுக்கெனில் ஒரு படைத்தளபதி தனது படைகளுக்கு எந்நேரமும் ஆயத்தமாக இருக்குமாறு உபதேசம் செய்வதைப் போன்றிருப்பார்கள். நபிமொழி முஸ்லிம்.

முஷ்ரிகீன்களான இறைநிராகரிப்பாளர்கள், நபியவர்களிடம் மறுமை எப்பொழுது நிகழுமென அடிக்கடி கேட்பார்கள்.
அல்லாஹ் தனது அடியார்கள் மீது கொண்ட அன்பின் காரணமாக மறுமை நாள் நிகழ்வதற்கு முன்னர் மக்கள் அல்லாஹ்வின் பால் மீள்வதற்காக அதனுடைய அடையாளங்களை வைத்துள்ளான்.
·         47:18. எனவே இவர்கள் தங்கள்பால் திடுகூறாக (தீர்ப்ப்புக்குரிய) அவ்வேளை வருவதை அன்றி (வேறு எதனையும்) எதிர்பார்க்கின்றனரா? அதன் அடையாளங்கள் திட்டமாக வந்து விட்டன.

மறுமை நாளின் பெரிய அடையாளங்களில் ஒன்று வெளியாகிவிட்டால் அதனைத் தொடர்ந்து ஏனைய அடையாளங்களும் வந்துவிடும்.
அல்லாஹ் மறுமை நாளின் அடையாளங்களை வைத்திருப்பதே பெரிய விடயமாகும்.
இதனைப்பற்றி ஒவ்வொரு நபிமார்களும் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.
·         ((அல்லாஹ் ஒவ்வொரு நபிமாரையும் அவர்களது சமூகத்துக்கு எச்சரிக்கை செய்யுமாறு அனுப்பியுள்ளான். நூஹ் நபியும் அவர்களுக்குப் பின் வந்தவர்களும் எச்சரிக்கை செய்திருக்கிரார்கள்.)) நூல் புகாரி.
முஹம்மது நபியவர்களும் அவர்களது உம்மத்தினரை எச்சரிக்கை செய்திருக்கின்றார்கள்.
·         (( நிச்சயமாக நான் அதனை எச்சரிக்கை செய்கின்றேன் )) என்றார்கள். நூல் புகாரி

நபியவர்கள் தனது தொழுகைகளில் தஜ்ஜாலுடைய பித்னாவை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருவதோடு, தனது தோழர்களுக்கு அல்குர்ஆனில் ஒரு ஸுராவை கற்றுக் கொடுப்பது போன்று தஜ்ஜாலைவிட்டும் பாதுகாப்புக்கோருவதைக் கற்றுக் கொடுப்பார்கள். மேலும் அந்நிகழ்வு நடைபெறுவதற்கு மிகவும் அன்மித்துவிட்டது என உபதேசிப்பார்கள்.
·         நவ்வாஸ் இப்னு ஸம்ஆன் ரலில்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகையில் நாங்கள் எங்களுக்கு அண்மையிலுள்ள ஈத்தமரத்துக்குப் பக்கத்தில் வந்துவிட்டதாக எண்ணுமளவுக்கு இருந்தது என்றார்கள் . நூல் - முஸ்லிம்.

முன்னோர்களான நல்லவர்கள் இந்நிகழ்வைப்பற்றி அடிக்கடி ஞாபகமூட்டுவார்கள்.
ஸப்பாரானீ றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில்... ((தஜ்ஜாலுடைய வருகையைப் பற்றி வரக்கூடிய நபிமொழிகளை  ஒவ்வொரு அறிஞர்களும் தங்களது குழந்தைகள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கு மத்தியிலும் அதிலும் குறிப்பாக சோதனைகள் மற்றும் பித்னாக்கள் மலிந்து விட்ட இந்த கால கட்டத்தில் எடுத்துரைப்பது கட்டாயமாகும்.))


        தஜ்ஜால் தற்பொழுது கடல் தீவுகளில் ஒரு தீவில் உறுதியாக கட்டப்பட்ட நிலையில் உயிருடனுள்ளான். இரண்டு கைகளும் பிடரியுடனும் முழங்காலிலிருந்து கனுக்கால் வரை இரும்பினால் பின்னப்பட்ட நிலையில் உள்ளான்.
அவன் வெளியாகும் நேரம் அன்மித்துவிட்டது.
·         அவன் தனக்குள்ளே ((நிச்சயமாக நான் வெளியாகுவற்கான அனுமதியளிக்கும் நேரம் அன்மித்துவிட்டது என்பான். )) நூல்- முஸ்லிம்

தஜ்ஜால் வெளியாவதற்கான சில அடையாளங்கள்.

       பலஸ்தீன் மற்றும் ஹவ்ரான் ஆகிய இரண்டுக்குமிடையில் உள்ள பைசான் என்ற ஊரிலுள்ள பழங்களை தந்து கொண்டிருந்த ஈத்தம் மரம் பழங்களை தராமலிருப்பதாகும்.
யாகூத் அல்ஹமவிய்யு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில் (அந்த இரண்டு மரங்களும் கனிகள் இல்லாத நிலையில் பலவிடுத்தம் பார்திருக்கின்றேன் என்றார்கள்.)

       தபரிய்யா சிறுங்கடலில் தண்ணீர் அற்றுப்போகும். தற்பொழுது அதில் நீர் குறைந்துள்ளது.

      ஷாம் தேசத்தில் உள்ள ஸுகர் என்ற நீரூற்று சென்றுவிடும். அதனால் அவ்வூரிலுள்ளவர்கள் விவசாயிகள் விவசாயம் செய்யமுடியாமல் போய்விடும்.

       அவனுடைய முதல் வரவு குராஸான் நாட்டில் இஸ்பஹான் என்ற நகரில் யஹுதிய்யாஹ் என்றழைக்கப்படும் வீதியுனூடாக இருக்கும். அவன் எழுபதாயிரம் யஹுதிகளுடன் வெளியாகுவான். அவனுக்கு காவலாளிகளும், உதவியாளர்களும் உள்ளனர்.

அவன் கடும் சிவப்பு நிறமுடைய, கொழுத்த, பெரும் தோற்றத்தையுடையவனாவான். அவனது முன்நெற்றி விசாலமானதாகும். அதில் வளைவுகளும் அமைந்திருக்கும். சுருள்களையுடைய அதிக முடிகளைக் கொண்டிருப்பான். அவனது கண் மிதக்கக்கூடிய திராட்சைப் பழத்தைப் போன்றிருக்கும்.
·         தமீமுத்தாரீ ரலியல்லஹு அன்ஹு அவர்கள் அவனைப்பற்றிக் கூறுகையில் (நாங்கள் மனிதர்களில் இவன் போன்ற பிரமாண்டமான எந்த மனிதர்களையும் காணவில்லை என்றார்கள்.)
இவ்வுலக படைப்புக்களில் பிரமாண்டமான படைப்பு இவனாகும்.
·         (( ஆதம் நபி முதல்  இவ்வுலக முடியும் வறை தஜ்ஜாலை விட பிரமாண்டமான எந்த படைப்புமில்லை )) நபிமொழி நூல் முஸ்லிம்.
அவன் வெளியாகும் போது அவனது பண்புகள் எவ்வாறு அமையப்பெறும் என்பதை  நபியவர்கள் விளக்கும் போது  நிச்சயமாக அவன் தஜ்ஜாலன்றி  உலகத்தைப் படைத்து பரிபாலிக்கும் கடவுளல்ல என்றார்கள்.

நிச்சயமாக தஜ்ஜால் இந்த சமுகத்தில்தான் வெளியாவான். இவனுடைய பண்புகளைப்பற்றி நபியவர்கள் கூறியதைப்போன்று வேறு எந்த நபியும் கூறவில்லை.
·         (( எந்த நபியும் தனது சமுகத்துக்கு சொல்லாத செய்தியை நான் உங்களுக்குக் கூறுகின்றேன். அறிந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அவன் ஒற்றைக் கண்ணுடையவனாவான். நிச்சயமாக அல்லாஹ் ஒற்றைக் கண்ணுடையவன் அல்ல.)) நூல் புகாரி.

       அறியாமை நிலவி, மாரக்கத்தில் ஒரு மந்த நிலை ஏற்படக்கூடிய சூழலிலே தஜ்ஜால் வெளியாகுவான். இந்நேரத்தில் உண்மையான இறைவிசுவாசியையும் இறைநிராகரிப்பாளனையும் அறிந்து கொள்ளலாம். ஏமாற்றப்படக்கூடியவைகளை விட்டும் முஸ்லிம் தெளிவுபெறுவான்.
       தஜ்ஜால் நான் தான் உலகத்தின் ரப் இறைவன் என் வாதிடுவான். அவன் உருவாக்கக்கூடியவைகள் மூலம் அடியார்கள் பித்னாவின் மூலம் வசீகரிக்கப்படுவார்கள்.
அவன் வெளியாகும் நேரம் மக்கள் அச்சத்தின் காரணமாக மலையின் பக்கம் ஒதுங்குவார்கள். அந்நேரம் தவ்பா எனும் பாவமன்னிப்பின் வாசல் மூடப்படும்.
·         (( மூன்று விடையங்கள் 1- மேற்கில் சூரியன் உதித்தல். 2- தஜ்ஜால்  3- தாப்பதுல் அர்ழ் என்ற அதிசயப்பராணி ஆகியவைகள் வெளியாகிவிட்டால் எந்த ஆத்மாவுடைய விசுவாசமும் அதன் மூலம் முன்னதாக செய்து கொண்ட நன்மைகளைத்தவிர வேறு எந்தப்பயனையும் அடைந்து கொள்ள முடியாது.)) முஸ்லிம்
தஜ்ஜாலுடைய பித்னாக்களில் சில ............

·         ஒரு மனிதனை கொலை செய்து உயிர்ப்பிப்பான்.
·         ஒரு மனிதனை வாளினால் இரண்டாகப் பிளந்து. பின்னர் அவைகளை ஒன்றிணைப்பான்.
·         ஒரு மனிதனை தலைமுதல் இரண்டு கால்களுக்கிடையில் உள்ளவைகளை துண்டுதுண்டாக வெட்டியபின் அவைகளுக்கிடையில் நடந்து செல்வான். பின்னர் அவைகளைச் சமப்படுத்துவான்.
·         ஒரு மனிதனுடைய இரு கால்களையும், கைகளையும் ஒன்றாகப் பிடித்து அவனிடம் உள்ள நெருப்பில் வீசுவான். மக்கள்; அவன் நெருப்பில் வீசப்பட்டு விட்டான் என நினைப்பார்கள். ஆனால் அவன் வீசப்பட்டது சுவர்க்கத்திலாகும். ஏனெனில் அவனது சுவர்க்கம் நரகமாகும். அவனது நரகம் சுவர்க்கமாகும்.
·         அவனிடம் இரண்டு ஆறுகள் இருக்கும்
Ø  பால் நிற தண்ணீர்  
Ø  தீச்சுவாலையுடைய நெருப்பு
இதுபற்றி நபியவர்கள் கூறும்போது (( இவைகளை அடைந்து கொண்டால் அவன் காட்டக்கூடிய நரக நெருப்பாறில் முங்கி தலையைக் குனித்து அதில் நீர் அருந்திக்கொள்ளட்டும், அது குளிர்மையான நீராகும். ஏன்றார்கள்.)) முஸ்லிம்.

·         வானத்தை நோக்கி மழை பெய்யுமாறு கட்டளையிடுவான் உடனே மழை பெய்யும். பூமியைப் பார்த்து புற்பூண்டுகளை முளைக்கச்செய்யுமாறு கட்டளையிடுவான். உடனே அதுவும் புற்பூண்டுளை வெளியாக்கிவிடும். பாழ் பூமிகளைப் பார்த்து உனது பொக்கிஷங்களை வெளியாக்குமாறு கட்டளையிடுவான் உடனே அதன் பொக்கிஷங்களை வெளியாக்கிவிடும்.
இப்னுல் அறபி றஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகையில் :- இவைகள் அனைத்தும் பயமுறுத்தக்கூடிய விடயங்களாகும்.

பூமியில் மிக வேகமாக நடந்து செல்வான்.
·         (( மழையை பின் தொடரக்கூடிய காற்றைப்போன்றிருக்கும் என நபியவர்கள் கூறினார்கள்.))
       பூமியில் நாற்பது வருடங்கள் வாழ்வான். அதில் ஒரு நாள் ஒரு வருடம் போன்றும் - மறுநாள் ஒரு மாதம் போன்றும் - அதற்கு அடுத்தநாள் ஒரு வாரம் போன்றும் - ஏனைய எஞ்சிய நாட்கள் நமது சாதாரன நாட்களைப்போன்றிருக்கும்.

மக்கா மற்றும் மதீனா நகர் தவிர்ந்த எல்லா இடங்களையும் சுற்றிவருவான். இவ்விரு நகரங்களையும் வானவர்கள் ஒவ்வொரு வாயிலிலும் வாள்களை ஏந்தியவண்ணம் அவனை நுழையவிடாமல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

எல்லா நகரங்களிலும் தஜ்ஜாலுடைய அச்சமும், அட்டகாசமும் நுழைந்துவிடும். ஆனால் மதீனாவினுள் அவனது அச்சமோ, அட்டகாசமோ நுழையமாட்டாது.

குறிப்பாக மக்கா மற்றும் மதீனாவாசிகள், தஜ்ஜாலுடைய பித்னாவை விட்டும் அல்லாஹ் அவர்களைப் பாதுகாப்பதற்காக வேண்டி, அவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்படுவதன் மூலம் நன்றி செலுத்தக்கடமைப்பட்டுள்ளார்கள்.

மதீனாவில் நுழைவதை தடுக்கப்படும் போது உஹது மலையின் மேற்குப்புறத்தில் உள்ள ஜுர்ப் சதுப்பு நிலத்தில் இறங்குவான். அவனிடம் செல்லக்கூடியவர்களில் அதிகமானவர்கள் பெண்களாகும்.

மதீனாவில் மூன்று நில நடுக்கங்கள் ஏற்படும். இதன் மூலம் இறைநிராகரிப்பாளர்கள் மற்றும் நயவஞ்சகர்கள் அனைவரும் மதீனாவை விட்டு வெளியேறிவிடுவார்கள்.
மனிதர்களில் சிறந்தவர்கள் எல்லாக்காலத்திலும் எல்லா நேரங்களிலும் இருப்பார்கள்.    தீமையைத் தடுத்தவர்கள் அவனைக் கண்டுகொள்வார்கள்.
·         3:110. மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்.

தஜ்ஜால் மதீனாவை சூழால் இருக்கும்பொழுது ஒரு வாலிபர் அவனிடம் சென்று அவனது படைப்பாற்றலையும், போலிக்கூத்துக்களையும் மறுத்துறைப்பான். நபியவர்கள் அந்த வாலிபனைப்பற்றிக் கூறும்பொழுது அவன்தான் மனிதர்களில் சிறந்தவன் என்றார்கள். அந்த வாலிபன் நிச்சயமாக நீதான் தஜ்ஜால் என நான் சாட்சிகூறுகின்றேன் எனக்கூறி நபியவர்கள் கூறிய ஹதீஸை முன்வைப்பான்.)) நூல் முஸ்லிம்.

       நபியவர்களுடைய மரணம் முஸ்லிம்களுக்கு ஒரு பேரிழப்பாகும். அவர்கள் உயிருடன் இருந்தால் அவனை விட்டும் பாதுகாப்புப் பெற அவர்களே போதுமாகும்.
·         (( அவன் வெளியாகும் பொழுது நான் இருந்தால் நானே அவனை எதிர்கொள்வேன் என்றார்கள்.)) முஸ்லிம்.
நபியவர்களுடைய மரணத்தின் பின்னர் ஒவ்வொருவரும் தன்னைத்தானே தஜ்ஜாலைவிட்டும் பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்புப் பெறும் வழிமுறைகளில் சில....

·         அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்கள் மற்றும் பண்புகள் பற்றிய ஷரீஅத் எனும் மார்க்க அறிவு.
·         தஜ்ஜால் ஒற்றைக்கண்ணன். அல்லாஹ் அவ்வாறில்லை. அல்லாஹ்வை உலகில் யாரும் காணமாட்டார்கள். தஜ்ஜாலை மனிதர்கள் அனைவரும் காண்பார்கள். தஜ்ஜாலுடைய கண்களுக்கிடையில் காபிர் என்று எழுதப்பட்டிருக்கும். வாசிக்கத்தெரிந்தவர். தெரியாதவர் அனைவரும் இதனை வாசிப்பார்கள்.
இமாம் ஷைகுல் இஸ்லாம் இப்னுதைமிய்யா அவர்கள் கூறுகையில்..... (குறிப்பாக பித்னாக்காலங்களில் முஃமின் எனும் இறைவிசுவாசிக்கு ஏனையவர்களுக்கு புலப்படாத சில விடயங்கள் தெளிவுபெறும். ) என்றார்கள்.

·         பித்னாக்களை விட்டும் விரண்டோடுவதும் அதனை விட்டு தூரமாகுவதும் ஒரு பாதுகாப்பாகும்.
((தஜ்ஜாலைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவனை விட்டும் விரண்டோடவும். அல்லாஹ்வின் மீது ஆணையாக நிச்சயமாக ஒரு மனிதன் அவனிடம் முஃமினாக வருகை தந்து, அவனுடைய அட்டகாசங்களையும் பித்தலாட்டங்களையும் பார்த்து அவனைப் பின்பற்றிவிடுவான்.)) என்றார்கள். நூல் அபூதாவூத்.

·         மார்க்கத்தில் உறுதியாக இருப்பதும் பாதுகாப்பாகும். நிச்சயமாக அவனை பின்பற்றுபவர்கள் இறைவிசுவாசிகளாக இருக்கமாட்டார்கள்.
·         அதிகமாக பிரார்த்தனையில் ஈடுபட்டு அவனை விட்டும் பாதுகாப்புக் கோரல். 
((நீங்கள் தொழுகையில் அத்தஷஹ்ஹுத் (அத்தஹிய்யாத்) ஓதும்போது நான்கு விடயங்களை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோறவும். 1- யா அல்லாஹ் நரக வேதணையை விட்டும் 2- கப்ர் எனும் மண்ணறை வேதணையை விட்டும் 3- வாழ்வு மற்றும் மரணம் ஆகியவைகளின் பித்னாவை விட்டும் 4- மஸீஹுத்தஜ்ஜாலின் பித்தலாட்டத்தை விட்டும் உன்னிடம் பாதுகாப்பக்கோறுகின்றேன். – அல்லாஹிம்ம இன்னீ அஊது பிக மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் பித்னதில் மஹ்யா வல்மமாதி வமின் பித்னதில் மஸீஹித்தஜ்ஜால்.            நூல் -  முஸ்லிம்.

தாவூஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களது குழந்தைகள் தொழுகையில் இதனை ஓதாவிட்டால் தொழுகையை மீட்டித்தொழுமாறு கட்டளையிடுவார்கள்.

·         அல்குர்ஆன் அனைத்து பித்னாக்களுக்கும் பாதுகாப்பாகும்.
·         எவர் தஜ்ஜாலுடைய வருகையைக் கேள்விப்பட்டு அவர் ஸுரதுல் கஹ்பில் முதல் பத்து வசனங்களை மனனமிட்ட நிலையிலிருந்தால் அவனுடைய பித்னாவை விட்டும் பாதுகாப்புப்பெறுவார். எவர் அவனைக் கான்கிறாரோ ஸுரதுல் கஹ்பின் முதல் பத்து வசனங்களை ஓதட்டும்.
அவனுடைய அட்டகாசம் அதிகரித்து அவனை பின்பற்றக் கூடிய மக்கள் அதிகரிக்கும் பொழுது திமஷ்க் நகரில் கிழக்குப்புற மனாறாவில் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வந்திறங்குவார்கள். அல்லாஹ்வுடைய நல்லடியார்கள் அவர்களை சூழ்ந்துகொள்வார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் பைதுல் முகத்திஸை முன்னோக்கிச் செல்லும் போது பலஸ்தீனில் லுத் என்ற வாசலில் தஜ்ஜாலை அடைந்துகொள்வார்கள். ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அவன் கண்டதும் உப்பு கரைவது போன்று கரைந்துவிடுவான். பின்னர் ஈஸா அலை அவர்கள் அவனை ஈட்டியால் கொலை செய்து விடுவார்கள்.

முஸ்லிம்களே ! அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையாகும். இதில் எந்த சந்தேகங்களுமில்லை. அது அவசரமாக வந்துவிடும்.
·         (( ஒரு மனிதன் பால்மடியிலிருந்து பால் கறந்து அது பாத்திரத்தை வந்தடையும்முன்னர்  மேலும் இரண்டு வியாபாரிகள் ஆடையை வாங்குதல் விற்பனை முடிவதற்கு முன்னர் மறுமை நாள் நிகழ்ந்துவிடும் என்றார்கள்.)) நூல் முஸ்லிம்.
முஸ்லிம்கள் எல்லா நேரங்களிலும் நன்மைகளை செய்வதற்கு முந்திக்கொள்ளவேண்டும்.  குறிப்பாக பித்னாக்கள் அதிகரித்து மார்க்கத்தில் ஒரு மந்த நிலை ஏற்படும் போது மிகவும் வழிப்படுவதை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

நபியவர்களுக்கு வழிப்படுதல் எல்லாநிலைமைகளிலும் பாதுகாப்பைத்தரும்
.
அல்லாஹ்விடத்தில் தஜ்ஜாலை விட மிகவும் கடினமானதுதான் மறைவான இணை வைத்தலாகும். அதுதான் ஒரு மனிதன் ஏனைய மனிதர்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக தொழுகையை அழகு படுத்துவதாகும். 


யா அல்லாஹ் ! எம்மனைவரையும் தஜ்ஜாலை விட்டும் பாதுகாப்புப் பெற்ற நல்டியார்களாக ஆக்கி அருள் புரிவாயாக ... ஆமீன் !!!

0 comments:

Post a Comment

 
Top