10 துல்ஹஜ் 1433 ஹி (அ) 26 அக்டோபர்  2012 அன்று ஈத் தொழுகைக்குப் பின் நடந்த குத்பாவில் கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்….
இடம் : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு : இஸ்லாத்தில் ஈத் பெருநாள் என்பதன் அர்த்தங்கள்.
இமாம் :  அலி அப்துர்ரஹ்மான் அல்ஹுதைபி.
இமாம் அவர்கள் ஈதுல்அழ்ஹா ஹஜ் பெருநாள் தின குத்பாவை இஸ்லாத்தில் ஈத் (பெருநாள்) என்பதன் அர்த்தங்கள் என்ற தலைப்பில் பெருநாள் என்றால் என்ன ? அதன் அர்த்தங்கள், பயன்பாடுகள் பற்றி கூறினார்கள். அல்லாஹ் இந்த சமுதாயத்துக்கு இரு பெருநாள் '' ஈதுல் பித்ர் - ஈதுல் அழ்ஹா '' களை வழங்கி சங்கைப்படுத்தியுள்ளான் என ஞாபகமூட்டினார்கள். மேலும் வாலிப ஆண்கள்,பெண்கள் மற்றும் சமூகத்தில் உள்ள அனைத்துத் தரப்பினர்க்கும் பயனளிக்கக் கூடிய பல உபதேசங்களையும் வழிகாட்டல்களையும் முன்வைத்து உபதேசித்தார்கள்.





அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் அல்லாஹுஅக்பர் லாஇலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலில்லாஹில் ஹம்த்.
      அல்லாஹ் அவனது திறன், அறிவாற்றல், வல்லமை மூலம் படைப்பினங்களை உருவாக்கி அவனது நாட்டப்படியே ஒவ்வொருவரின் உயிலையும் செயல்படுத்தினான்.
      படைப்பினங்களை நல்அமல்கள் செய்யுமாறு அழைத்து, அதற்கு மிகப்பெரும் கூலியையும் வாக்களித்துள்ளான். மேலும் கெட்ட செயல்களுக்கு தடை விதித்து அத்தடையை தாண்டுபவர்களுக்கு தண்டணையின் மூலம் எச்சரித்துள்ளான்.
o    4:40. நிச்சயமாக அல்லாஹ் (எவருக்கும்) ஓர் அணுவளவு கூட அநியாயம் செய்ய மாட்டான்; (ஓர் அணுவளவு) நன்மை செய்யப்பட்டிருந்தாலும் அதனை இரட்டித்து, அதற்கு மகத்தான நற்கூலியை தன்னிடத்திலிருந்து (அல்லாஹ்) வழங்குகின்றான்.
      ஒவ்வொரு சமுதாயத்துக்கும் அவர்களது கோட்பாடுகளாலும், மொழியாலும், அவர்களுக்கு மத்தியில் உள்ள இணைப்புக்களை பலபடுத்தி அழகான ஆடைகள் அணிந்து அழகையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவதற்கென பெருநாள்தினம் உள்ளது.
o    22:67. (நபியே!) ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் வணக்க வழிபாட்டு முறையை ஏற்படுத்தினோம்; அதனை அவர்கள் பின்பற்றினர்; எனவே இக்காரியத்தில் அவர்கள் திடனாக உம்மிடம் பிணங்க வேண்டாம்; இன்னும்: நீர் (அவர்களை) உம்முடைய இறைவன் பக்கம் அழைப்பீராக! நிச்சயமாக நீர் நேர்வழியில் இருக்கின்றீர்.
      அய்யாமுல் ஜாஹிலிய்யா (அறியாமை)க்கால பெருநாளின் மூலம் பயன்பாடுகளற்ற கெடுதியே உள்ளது. அல்லாஹ் வழங்கிய பெருநாள் பயன்கள் மற்றும் அபிவிருத்திகள் போன்றவைகளை வழங்குகிறது.

      அல்லாஹ் முஸ்லிம்களுக்கு இரு பெருநாள்களை வழங்கியுள்ளான்.

1-     ஈதுல்பித்ர் (நோன்புப்பெருநாள்) :- இது ரமழான் மாதம் பகலில் நோன்பு நோற்று இரவில் நின்று வணங்கியவர்கள் அல்லாஹ் அனுமதியளித்தவைகள் மூலம் மகிழ்ச்சிபெற வழங்கப்பட்ட தினமாகும்.

2-     ஈதுல்அழ்ஹா (ஹஜ்ஜுப்பெருநாள்) :- இது இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையின் செயல்களுக்குபின் வழங்கப்பட்ட தினமாகும்.
o    (( நபியவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது மக்கள் இருதினங்களில் விளையாட்டில் ஈடுபடுபடுவதைக் கண்டு இது என்ன நாட்கள் என வினவியபோது அய்யாமுல் ஜாஹிலிய்யாக் காலத்தில் நாங்கள் விளையாடுபவர்களாக இருந்தோம் என்றனர். அதற்கு நபியவர்கள் அல்லாஹ் நோன்புப்பெருநாள், ஹஜ்ஜுப்பெருநாள் ஆகிய தினங்களை அவ்விரு தினங்களை விட சிறப்புக்குரியதாக மாற்றியிருக்கிறான் என்றார்கள்.)) நபிமொழி – அறிவிப்பவர் அனஸ் ரலியல்லாஹு அவர்கள்.

இஸ்லாத்தில் இரு பெருநாள் தினங்களுக்கும் பல சிறப்புக்களும், மகிமைகளும் உள்ளன. அதனைப் பற்றி சிந்திப்பவர்கள் அறிந்து கொள்வார்கள். 
o    6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.
o    :163. 'அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்).
மனிதனின் கண்ணியம் மற்றும் கௌரவம் அல்லாஹ்வை ஓர்மைபடுத்துவதிலும், மனிதனின் கேவலம் மற்றும் நஷ்டம் அல்லாஹ்வுக்கு இணை வைப்பதிலும் உள்ளது.
o    98:6. நிச்சயமாக வேதக்காரர்களிலும் முஷ்ரிக்குகளிலும் எவர்கள் நிராகரிக்கிறார்களோ அவர்கள் நரக நெருப்பில் இருப்பார்கள் - அதில் என்றென்றும் இருப்பார்கள் - இத்தகையவர்கள்தாம் படைப்புகளில் மிகக் கெட்டவர்கள் ஆவார்கள்.
o    98:7. நிச்சயமாக, எவர்கள் ஈமான் கொண்டு, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்கள் தாம் படைப்புகளில் மிக மேலானவர்கள்.
o    98:8. அவர்களுடைய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி திருப்தி அடைவான். அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும்.

படைத்தவனை மறந்து படைக்கப்பட்டவைகளிடம் மன்றாடுபவனும், படைத்தவனிடம் வைக்கப்படவேண்டிய பரம்சாட்டுதல், ஆதரவுவைத்தல், நேர்ச்சைவைத்தல், உதவிகோரல் போன்ற வணக்கங்களை படைக்கப்பட்டவைகளிடம் எதிர்பார்ப்பவனும் மிகவும் வழிகெட்டு நஷ்டமடைந்தவனாவான்.

இரு பெருநாள்களின் அர்த்தங்களில் உள்ளதாவன……

Ø  வாராந்த, பெருநாள், மற்றும் மற்ற முஸ்லிம்கள் ஒன்று கூடும் இடங்களில் நடைபெறும் பிரசங்களினூடாக சமூகத்தில் பலதரப்பட்ட வகுப்பினரும் உணரந்து கொள்ளும் வகையில்  இஸ்லாமிய சட்டங்களை பரவச்செய்தல்.
Ø  இஸ்லாமிய மார்க்கம் எனும் நேர்வழி மூலம் எம்மை பாதுகாத்த அல்லாஹ்வுக்கு நன்றியுடையவர்களாக இருத்தல்.
Ø  பெருநாள் ஒன்றுகூடல் மூலம் அல்லாஹ்வின் அருள்,அபிவிருத்தி போன்றவைகளைப் பெற்றுக்கொள்ளல்.
o    ((உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகையில் நபியவர்கள் ஈதுல்பித்ர் - ஈதுல் அழ்ஹா பெருநாள் தினங்களில் அடிமைகள், மாதவிடாய் பெண்கள் மற்றும் அனைவரையும் பெருநாள் நிகழ்ச்சியில் கலந்து தொழுகை, துஆ, தக்பீர் போன்றவைகள் மூலம் இறையருளை அடைந்து கொள்வதற்காக வீட்டைவிட்டு வெளியாகுமாறும் மாதவிடாய் பெண்கள் தொழுகையைத் தவிர்த்துக்கொள்ளுமாறும்  கட்டளையிடுவார்கள்.)) நபிமொழி – புகாரி முஸ்லிம்.
Ø  பொறாமை, வெறுப்பு, மோசடி, குரோதம் போன்ற கெட்ட பண்புகளை விட்டும் உள்ளத்தைப் பரிசுத்தப்படுத்தி அழைப்பு, இரக்கம், கருணை போன்றவைகளினூடாக முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய சகோதர உறவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளல்.
Ø  ஸலாம் எனும் முகமன் கூறல், ஒருவரை ஒருவர் சந்தித்தல், அன்னதானம் வழங்குதல், உறவினர்கள் அண்டை வீட்டினருடன் கருணையைப் பகிர்ந்துகொள்ளல், தவறுகள் குற்றங்களை மறந்து மன்னித்து இஸ்லாமிய நற்பண்புகளை நடைமுறையில் உறுதிபடுத்திக்கொள்ளல்.
o    ((முஸ்லிம்கள் அவர்களுக்கு மத்தியில் இரக்கம், அன்பு, கருணை காட்டுவதில் ஓருடலைப்போன்றவர்கள். உடலுருப்பில் ஒன்று நோய்வாய்ப்படும்போது ஏனைய உறுப்புக்கள் அனைத்தும் விழித்திருந்து தடுமாற்றமடைவதைப்போன்று.))  நபிமொழி – புகாரி முஸ்லிம் அறிவிப்பாளர் - நுஃமான் இப்னு பஷீர்.
o    ((மறுமையில் ஒரு இறை விசுவாசியின் அளவுத்தட்டில் மிகவும் கனமாக இருக்கக்கூடியது நற்பண்புகளாகும். நிச்சயமாக கெட்ட நடத்தையுடையவர்களை அல்லாஹ் வெறுக்கிறான்.)) நபிமொழி – திர்மிதி – அறிவிப்பாளர் அபூதர்தா ரலியல்லாஹுஅன்ஹு.
ஹஜ்ஜுடைய வணக்கங்களில் அதிகமானவை இத்தினத்தில் இருப்பதால்  அல்லாஹ் இத்தினத்துக்கு ஹஜ்ஜுல் அக்பர் எனப்பெயரிட்டுள்ளான்.
o    ((அல்லாஹ்விடத்தில் நாட்களில் மிகவும் சிறப்புக்குரியது யவ்முந்நஹ்ர் ஈதுல் அழ்ஹா பெருநாள்தினமும் அதனை அடுத்துவரும் நாளான யவ்முல் கர்-உம் ஆகும்)) நபிமொழி – நூல் அபூதாவூத்.

நற்செயல்கள்

தொழுகையில் கவனமாக இருப்பதுடன் ஜமாஅத்துடன் பள்ளியில் நிறைவேற்றுவதோடு குடும்பத்தினர்களுக்கு தொழுகையை எத்திவைக்கவேண்டும். தொழுகையானது கெட்ட விடயங்களை விட்டும் பாதுகாக்கும். இதனை யார் பாதுகாப்பாக நிறைவேற்றுகிறாரோ அவர் மார்க்கத்தைப் பாதுகாத்தவராவார். அவருக்கு அல்லாஹ் சுவர்க்கத்தை ஏற்படுத்தியுள்ளான். எவர் இதனை பாழ் படுத்துகிராரோ அவர் உலகத்தையும் இழந்து மறுமையில் கிடைக்க வேண்டிய தனது பங்கையும் இழந்துவிடுவதோடு நரகில் நுழைவிக்கப்படுவார்.
o    74:42. 'உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?' (என்று கேட்பார்கள்.)
o    74:43. அவர்கள் (பதில்) கூறுவார்கள்: 'தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
o    (( அடியானுக்கும் இணைவைத்தலுக்கும் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்.)) நபிமொழி – அறிவிப்பவர் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு- நூல் முஸ்லிம்
o    (( மறுமையில் ''வணக்கம் சம்பந்தமாக'' முதலில் கேட்க்கப்படும் கேள்வி  தொழுகை பற்றியதாகும்.)) நபிமொழி.
தொழுகையின் சட்டதிட்டங்களை அறிந்து நிறைவேற்றவும்.
ஸகாத் கடமையை முறையாக நிறைவேற்றவும்.  அது உங்களையும் சொத்துக்களையும் ஆபத்துக்களை விட்டும் தூய்மைப்படுத்தும். முறையாக நிறைவேற்றத் தவறும் போது அபிவிருத்தியை இழந்து இவ்வுலகிலும் மறுமையிலும் ஆபத்தை எதிர்கொள்ளவேண்டும்.
o    3:180. அல்லாஹ் தன் அருளினால் தங்களுக்குக் கொடுத்திருக்கும் பொருட்களில் யார் உலோபத்தனம் செய்கிறார்களோ அது தமக்கு நல்லது என்று (அவர்கள்) நிச்சயமாக எண்ண வேண்டாம் - அவ்வாறன்று அது அவர்களுக்குத் தீங்குதான்; அவர்கள் உலோபத்தனத்தால் சேர்த்து வைத்த (பொருட்கள்) எல்லாம் மறுமையில் அவர்கள் கழுத்தில் அரிகண்டமாக போடப்படும்; வானங்கள், பூமி ஆகியவற்றில் (இருக்கும் அனைத்துக்கும்) அனந்தர பாத்தியதை அல்லாஹ்வுக்கே உரியதாகும். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அறிகிறான்.
உலகில் உள்ள செல்வந்தர்கள் முறையாக ஸகாத் கடமையை நிறைவேற்றுவார்களாயின் உலகில் வறுமைப்பட்டவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
உயிருடன் இருக்கும் போது தர்மம் செய்வது மாத்திரமே உனக்குரியது. வாரிசுகளுக்கு சேர்த்து வைப்பது உனக்குரியதல்ல.
வருமானத்துக்குரிய அளவுக்கு தர்மத்தை மாதாமாதாம் வழங்கிவிடவும்.
நோன்பு நோற்று இறையன்பை பெற்றுக்கொள்ளவும்.
ஹஜ் கடமையானவர்கள் அவசரமாக கடமையை நிறைவேற்றவும். சந்தர்ப்பம் தவறியபின் கவலைப்படுவதில் பயனில்லை.
பெற்றோருக்கு பணிவிடை செய்யவும் - உறவினர்களை சேர்ந்து நடக்கவும் அனாதைகள், ஏழைகளுக்கு உபகாரம் செய்யவும்.
நன்மையை ஏவி தீமையைத் தடுக்கவும். இவ்விரண்டுமே இஸ்லாத்தின் காவலர்கள்.
ஒப்பந்தங்ளை எல்லா சந்தர்ப்பங்களிலும் முறைப்படி நிறைவேற்றிவிடுங்கள்.
o    7:85. மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்.
o    2:188. அன்றியும் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள்.

தவிர்ந்து கொள்ள வேண்டிய ( பாவ ) செயல்கள்

இணை வைத்தல் மிகப்பெரும் பாவமாகும்.
o    5:72. எவனொருவன் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பானோ அவனுக்கு அல்லாஹ் சுவனபதியை நிச்சயமாக ஹராமாக்கிவிட்டான். மேலும் அவன் ஒதுங்குமிடம் நரகமேயாகும் அக்கிரமக்காரர்களுக்கு உதவிபுரிபவர் எவருமில்லை.
அல்லாஹ் தடைவிதித்த உயிரைக் கொலைசெய்தல் பெரும்பாவமாகும்.
o    (( ஒரு முஃமின் எனும் இறைவிசுவாசியைக் கொலை செய்வது இவ்வுலகம் அழிவதைவிட அல்லாஹ்விடத்தில் மிகவும் பெரியதாகும்.)) நபிமொழி – நஸாஇ
விபச்சாரத்தை எச்சரிக்கையுடன் தவிர்ந்துகொள்ளுங்கள்.
o    17:32. நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும் (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது.
o    ((இணைவைத்தலுக்கு அடுத்ததாக உள்ள பெரும் பாவம் அனுமதிக்கப்படாத கருப்பையினுள் விந்துவை நுழைவிப்பதாகும்.)) நபிமொழி
வட்டியை எச்சரிக்கையுடன் தவிர்ந்துகொள்ளுங்கள். அது நெருப்பாகும். உங்களையும் செல்வத்தையும் அழித்துவிடும்.
o    2:276. அல்லாஹ் வட்டியை (அதில் எந்த பரக்கத்தும் இல்லாமல்) அழித்து விடுவான்; இன்னும் தான தர்மங்களை (பரக்கத்துகளைக் கொண்டு) பெருகச் செய்வான்; (தன் கட்டளையை) நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை.
மக்களின் செல்வங்களை அநியாயமாக சூறையாடுவதை தவிர்ந்துகொள்ளுங்கள்.
புறம்பேசுதல், கோள் சொல்லுதல் போன்றவற்றை தவிர்ந்து கொள்ளுங்கள்.
போதைப்பொருள் அதனுடன் சம்பந்தமான அனைத்தையும் தவிர்ந்துகொள்ளுங்கள். அது சுயபுத்தியை இல்லாமல் செய்து மனிதத்தன்மையையும் இழக்கச்செய்துவிடும். அது கெடுதிகளின் வாயிலாகும்.
கரண்டைக்காலுக்கு கீழ் ஆடைகள் அணிவதையும் தற்பெருமையையும்   தவிர்ந்துகொள்ளுங்கள். இது அல்லாஹ்வின் அருள் பார்வையைவிட்டும் தூரமாக்கிவிடும்
o    ((எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் தற்பெருமை உள்ளதோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்.)) நபிமொழி முஸ்லிம்.

பெண்களுக்குரிய உபதேசங்களில் சில........
பெண்களே ! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றுங்கள். பெருநாள்தினத்தில் பெண்கள் நடந்துகொள்ளவேண்டிய நபியவர்களின்  போதனைகளைப் பாதுகாத்து பின்பற்றுங்கள்.
(( பெருநாள் தினம் நபியவர்கள் ஆண்களின் வரிசைகளைப் பிரித்து கடந்து பிலால் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களுடன் பெண்கள் பகுதிக்கு வருகை தந்து பின்வரும் அல்குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்.
o    60:12. நபியே! முஃமினான பெண்கள் உங்களிடம் வந்து அல்லாஹ்வுக்கு எப்பொருளையும் இணைவைப்பதில்லையென்றும்; திருடுவதில்லை என்றும்; விபச்சாரம் செய்வதில்லை என்றும் தங்கள் பிள்ளைகளை கொல்வதில்லை என்றும், தங்கள் கைகளுக்கும், தங்கள் கால்களுக்கும் இடையில் எதனை அவர்கள் கற்பனை செய்கிறார்களோ அத்தகைய அவதூறை இட்டுக்கட்டிக் கொண்டு வருவதில்லை என்றும், மேலும் நன்மையான (காரியத்)தில் உமக்கு மாறு செய்வதில்லையென்றும் அவர்கள் உம்மிடம் பைஅத்து - வாக்குறுதி செய்தால் அவர்களுடைய வாக்குறுதியை ஏற்றுக் கொள்வீராக; மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடுவீராக; நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன்; மிக்க கிருபையுடையவன்.
o    பின்னர் நபியவர்கள் நீங்கள்தான் அவர்களா ? என்று கேட்டபோது ஒரு பெண் ஆம் யாரஸுல்லாஹ் எனப்பதிலளித்தார்கள். )) நபிமொழி – புகாரி.

முஸ்லிம் பெண்மகளே ! அல்லாஹ்வுக்கு அஞ்சி இஸ்லாமிய குடும்பத்தை கட்டியெழுப்பக்கூடிய சிறந்த தாயாக இருப்பாயாக !
எல்லாவிதமான கெட்டசெயல்களையும் தவிர்த்து சிறப்புக்குரிய நல்ல பண்புகளைக் கொண்டவர்களாகவும், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நேசம்கொள்ளக் கூடியவர்களாகவும் இருப்பாயாக !
 முன்னோர்களான நல்லோர்களின் வழிமுறையைப் பின்பற்றி குழந்தைகளை வளர்தெடுப்பீராக !
உயரிய இலட்சியத்தை அடைந்துகொள்வதற்காக கணவனுக்கு உதவக்கூடிய சிறந்த மனைவியாக இருப்பீராக !
o    3:133. இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள் பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது
o    3:134. (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்; தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள்; மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள்; (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான்.
--------------------------------------------
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! பெருநாள் தினம் சிறப்புக்குறிய தினமாகும். இத்தினத்தில் ஹாஜிகள் குர்பான் மற்றும் ஹஜ்ஜுடைய வணக்கங்களை நிறைவேற்றுவதன் மூலம் அல்லாஹ்வின் இறையன்பைப் பெறுகிறார்கள். ஹாஜிகள் அல்லாதவர்கள் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்  காட்டியமுறையில் குர்பான் அறுத்துப் பலியிடுவதன் மூலம் இறையன்பைப் பெறுகிறார்கள்.

இந்தசமூகத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பம்சங்களில் உள்ளதுதான் இந்த சமூகத்தின் வரலாறுகளை நபிமார்களுடைய வரலாறுகளுடன் அல்லாஹ் இணைத்துக்கூறுகிறான்.
o     நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால் என்னையே நீங்கள் வணங்குங்கள்.
o    ((ஸஹாபாக்கள் யாரஸுலல்லாஹ் ! அழாஹீ என்றால் என்ன எனக்கேட்டபோது இது  உங்களது தந்தை இப்ராஹீமினதும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களினதும் வழிமுறையாகும் எனப் பதலளித்தார்கள். அப்பொழுது இதன்மூல் எங்களுக்கு என்ன நன்மை என வினவியபோது ஒவ்வொ உரோமத்துக்கும் ஒரு நன்மை கிட்டும் எனப்பதிலளித்தார்கள். )) நபிமொழி – அறிவிப்பாளர் - அஹ்மத்,இப்னுமாஜஹ் - அறிவிப்பாளர் : ஸைத் இப்பு அர்கம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்.
-      நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்  அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையாக  தனது மகன் இஸ்மாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அறுக்குமாறு கனவில் கண்டு அதனை நிறைவேற்ற முற்பட்டார்கள்.
o    37:104. நாம் அவரை 'யா இப்றாஹீம்!' என்றழைத்தோம்.
o    37:105. 'திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம்.
o    37:106. 'நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்.'
o    37-107. ஆயினும் நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்குப் பகரமாக்கினோம்.
நமது தந்தை இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மனைவி, மகன் அனைத்தையும் அல்லாஹ்வுக்காக தியாகம் செய்து வெற்றி பெற்றார்கள்.
இப்ராஹீம் நபிக்கு வழங்கப்பட்டிருந்த கலீல் எனும் சிறப்புப்பட்டம் அவர்களுக்குப்பின் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு மாத்திரமே வழங்கப்பட்டது.
உழ்ஹிய்யா என்பது பெருநாள் தினத்தில் சிறப்புக்குறிய ஒரு செயலாகும்.
இந்த ''உழ்ஹிய்யா எனும்'' வணக்கத்தின் மூலம் எதிர்காலத்தில் வரக்கூடிய ஒவ்வொரு சந்ததியினரும் இப்ராஹீம் நபியுடைய இந்த வரலாறுகளைக் கூறிக் கொண்டேயிருப்பார்கள்.
o    ((ஆதமுடைய மகன் பெருநாள்தினத்தில் செய்யக்கூடி வணக்கங்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அறுத்துப் பலியிடுவதாகும். மறுமையில் அதனுடைய கொம்புகள், உரோமங்கள் எல்லாம் சாட்சியாக வரும். அறுக்கப்பட்ட இரத்தம் நிலத்தில் விழுவதற்க்கு முன்னர் அல்லாஹ்விடத்தில் பெரும் அந்தஸ்துகுரியதாக ஆகிவிடும்........)) நபிமொழி
o    (( பாதிமாவே ! உனது உழ்ஹிய்யா அறுக்கப்படுமிடத்துக்கு சமுகமளிப்பாயாக ! அதிலருந்து விழும் ஒவ்வொரு இரத்தச்சொட்டுக்கும் முன்சென்ற உனது பாவங்கள் மன்னிக்கப்டும் என நபியவர்கள் கூறினார்கள்.)) நபிமொழி – அறிவிப்பாளர் - அபூஸஈத் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள்.
உழ்ஹிய்யாவின் சட்டதிட்டங்கள்.

Ø  உழ்ஹிய்யாவுக்காக அறுக்கப்படும் பிராணி தேக ஆரோக்கியமாகவும், கொழுத்ததாகவும் இருப்பது விரும்பத்தக்கதாகும்.
Ø  அறுக்கப்படும் பிராணி நொண்டி, குருடு, நோய், காது அறுக்கப்பட்டது அல்லது பிளக்கப்பட்டவை அதிக மெலிவுடையது போன்ற குறைகளைவிட்டும் தூய்மையானதாக இருத்தல் அவசியமாகும்.

பிராணியின் வயது
o    ஓட்டகம் :- ஐந்து வருடம் பூர்த்தியானதாக இருத்தல் வேண்டும். ஏழு நபர்கள் கூட்டாக கொடுக்கமுடியும்.
o    மாடு :- இரண்டு வருடம் பூர்த்தியானதாக இருத்தல் வேண்டும். ஏழு நபர்கள் கூட்டாக கொடுக்கமுடியும்.
o    ஆடு :- 1- ஒரு வருடம் பூர்த்தியானதாக இருத்தல் அவசியம்.                             2- செம்மறி ஆடு ஆறுமாதங்கள் பூர்த்தியானதான இருத்தல் அவசியம். ஒருவருக்கு மாத்திரம் உரியது.
அறுக்கும் முறை
o    ஓட்டகம்:- அறுக்கும்போது இடது கைக்கு விலங்கிட்டு நின்றநிலையில் கிப்லாவை முன்னோக்கியவாறு அறுத்தல் ஸுன்னத்தாகும். 
o    மாடு – ஆடு :- அறுக்கும்போது இடதுபக்கவிலாவின் பக்கம் படுக்கவைத்து கிப்லாவை முன்னோக்கியவாறு அறுத்தல் ஸுன்னத்தாகும்.
o    அறுக்கும்போது  பிஸ்மில்லாஹி ''அல்லாஹ்வின் திருப்பெயரால்'' என்றுகூறுவது கட்டாயமாகும். அத்துடன் வல்லாஹுஅக்பர் அல்லாஹும்ம ஹாதா மின்க வலக என்பதை கூறுவதும் விரும்பத்தக்கதாகும்.
o    பெருநாள் தொழுகைக்குப்பின்னர் அறுத்தல் வேண்டும். தொழுகைக்கு முன்னதாக ஆறுக்கப்படுபவை உழ்ஹிய்யாவாக ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது.
o    மூன்றில் ஒரு பகுதியை உண்பதும், மூன்றில் ஒரு பகுதியை நன்கொடையாகவும், மூன்றில் ஒருபகுதியை தர்மமாகவும் கொடுப்பது விரும்பத்தக்கதாகும்.
o    அறுக்கப்படும் பிராணியிலிருந்து அறுப்பவருக்கு கூலியாக எதனையும் கொடுக்கக்கூடாது.
கொடுக்கப்படவேண்டிய காலம்.
o    பெருநாள் தினம் துல்ஹஜ் 10 ஆம் நாள்.
o    அய்யாதுத்தஷ்ரீக் துல்ஹஜ் 11,12,13 ஆகிய மூன்று தினங்கள்.

முடிவுரை

மாளிகைகளில் வாழ்ந்தவர்கள் தற்பொழுது மண்ணறையில் வாழ்கிறார்கள். எனவே மரணத்தை எண்ணி அதற்காக ஆயத்தமாகுங்கள்.
எவர் அல்லாஹ்வுடன் நல்லமுறையில் நடந்துகொள்கிறார்களோ மறுமையில் அவர்களை அல்லாஹ் சங்கைப்படுத்துவான்.
அல்லாஹ்வுடைய அருள்களுக்கு நன்றிசெலுத்துங்கள்.
மகிழ்ச்சிக்குறிய இத்தினத்தில் நமது முஸ்லிம் சகோதரர்கள் எங்கெல்லாம் சிரமங்களுக்கும் கவலைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார்களோ அவர்களுடைய விடிவுக்கும் பாதுகாப்புக்கும் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக.
ஈதுல் அழ்ஹா பெருநாளை இஸ்லாமிய வழிகாட்டலில் பயன்படுத்திக்கொண்ட நன்மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக ஆமீன்!!!

0 comments:

Post a Comment

 
Top