அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் பெயரால்
நாள் – 02 ரபிய்யுல் அவ்வல் 1435 ஹி(அ) 03 ஜனவரி
2014
இடம் - மஸ்ஜிதுந்நபவி
இமாம் - அலி அப்துர்ரஹ்மான் அல் ஹுதைபி
தலைப்பு - பாவமன்னிப்பும் அதன் சிறப்பும்.
இமாம் அலி அப்துர்ரஹ்மான் அல் ஹுதைபி அவர்கள் தவ்பா எனும் பாவமன்னிப்பும்,
அதன் சிறப்பும் எனும் தலைப்பில் தவ்பாவைப் பற்றியும், அல்குர்ஆன் அல்ஹதீஸில் வரக்கூடிய
அதன் சிறப்புகளையும் எடுத்துக்கூறினார்கள்.
முஸ்லிம்களே !
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். இதன் மூலமே வெற்றி, ஈடேற்றம் சுபீட்சம் அனைத்தையும்
அடைந்து கொள்ளலாம்.
நிச்சயமாக ஒரு
அடியானின் கண்ணியம் முழுமையாக அல்லாஹ்வுக்கு அடிபணிவதிலாகும். ஒரு அடியானின் அழிவும்,
கேவலமும் பெருமையடித்து அல்லாஹ்வுடைய கட்டளைகளுக்கு மாறுசெய்வதிலாகும்.
·
35:10. எவன் இஸ்ஸத்தை - கண்ணியத்தை நாடுகிறானோ, அவன் எல்லாக்
கண்ணியமும் அல்லாஹ்வுக்கே உரியதாகும் (என்பதை அறிந்து கொள்ளட்டும்); தூய்மையான வாக்குகளெல்லாம்
அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்;
அன்றியும் எவர்கள் தீமைகளைச் செய்யச்சதி செய்கிறார்களோ அவர்களுக்குக் கடினமான வேதனையுண்டு
- இன்னும் இவர்களுடைய சதித்திட்டம் அழிந்து போகும்.
·
40:60. உங்கள் இறைவன் கூறுகிறான்: 'என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்;
நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும்
பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்.'
அல்லாஹ்வுடைய அன்பையும்.
அவனுக்கு அடிபணியக்கூடிய பண்புகளையும் வணக்கங்கள் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
வணக்கங்களில் மிக
முக்கியமான ஒன்றுதான் தவ்பா எனும் பாவமன்னிப்பு வேண்டுவதாகும். தவ்பா மிக சிறப்புக்குரிய
வணக்கமாகும். அதிலும் குறிப்பாக குப்ர் எனும் இறைநிராகரிப்பை விட்டும் தவ்பா செய்து
மீள்வது கட்டாயமாகும்.
ஹுத் அலைஹிஸ்ஸ்லாம் அவர்களது சமுகத்துக்கு உபதேசித்ததை அல்லாஹ்
கூறும் பொழுது ...
·
11:52. 'என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம்
பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள்
மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும்
வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி
விடாதீர்கள்' (என்றும் எச்சரித்துக் கூறினார்).
அல்லாஹ் நயவஞ்சகர்களை தவ்பாவின் பால் அழைக்கும் போது ...
·
9:74. எனவே அவர்கள்
(தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள்
புறக்கணித்தால் அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும்
வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.
தவ்பா எனும் பாவமன்னிப்பை
வேண்டுவது புத்தியுள்ளவர்கள் அனைவர் மீதும் கடமையாகும்.
·
24:31. மேலும் முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்)
நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி) நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள்
அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள்.
·
66:8. ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா
செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்;
தவ்பா என்பதன் பொருள் பெரிய, சிறிய
பாவங்கள் அனைத்தையும் விட்டுவிட்டு அல்லாஹ்வின் பால் மீள்வதாகும். தெரிந்தும், தெரியாமலும்
செய்த பாவங்கள், அல்லாஹ் அடியார்களுக்கு செய்த நன்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதில் பொடுபோக்கு, இறைநினைவை விட்டும்
மறந்திருத்தல் போன்றவைகளை விட்டுவிட்டு அல்லாஹ்விடம்
மீள்வதாகும்.
·
(மனிதர்களே ! அல்லாஹ்விடத்தில் தவ்பாசெய்து பாவமன்னிப்புக் கோருங்கள்.
நிச்சயமாக நான் ஒரு நாளைக்கு நூறு விடுத்தம் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோருகின்றேன்
என கூறினார்கள்.) நபிமொழி – நூல் முஸ்லிம் - அறிவிப்பாளர் அகர் அல் முஸனி ரலியல்லாஹு
அன்ஹு அவர்கள்.
தவ்பாவுக்கான நிபந்தனைகள். அறிஞர்களின் கூற்று..
அல்லாஹ்வுக்கும்,
மனிதர்களுக்குமிடையிலுள்ளவைகளுக்கு மூன்று நிபந்தனையாகும்.
1)
பாவத்தைவிட்டும்
தவிர்ந்து கொள்ளல்.
2)
பாவம் செய்ததை
எண்ணி மனம் வருந்துதல்.
3)
அப்பாவத்தின்
பால் மீளாமலிருப்பதை உறுதிகொள்ளல்.
அடியார்களுக்கிடையிலுள்ளவையாக
இருந்தால் ...
-
அடியாரிடமிருந்து
அபகரித்தவைகளை திருப்பிக்கொடுத்தல்.
-
பிறரைப்பற்றி
புறம் பேசியிருந்தால் உரியவரிடம் மன்னிப்புக்கோரல்.
மனிதன் அவனுடைய உரிமையை தானாகவே முன் வந்து மன்னித்து விட்டால்
அவனுக்குரிய கூலி அல்லாஹ் விடமுள்ளது.
அல்லாஹ் தவ்பா
செய்வதை ஆர்வமூட்டி, அதனுடைய நிபந்தனைகளுக்குட்பட்டதாக இருந்தால் அதற்குரிய கூலியையும்
வாக்களித்துள்ளான்.
·
20:82. 'எவன் பாவமன்னிப்புத் தேடி ஈமான் கொண்டு நற்செயல்களையும்
செய்து அப்பால் நேர்வழியும் அடைகிறானோ அவனுக்கு நிச்சயமாக நான் மிகவும் மன்னிப்பவனாக
இருக்கின்றேன்' (என்று கூறினோம்).
பாவமன்னிப்பை வேண்டுபவர்கள் பகலிலும் இரவிலும் விரும்பிய எல்லாநேரங்களையும்
பயன்படுத்திக்கொள்ளலாம்.
·
(பகலில் பாவம் செய்தவனின் பாவத்தை மன்னிப்பதற்காக இரவிலும்,
இரவில் பாவம் செய்தவனின் பாவத்தை மன்னிப்பதற்காக பகலிலும் மேற்கில் சூரியன் உதமாகும்
காலம் வரை நிச்சயமாக அல்லாஹ் அவனது கையை விரித்தவனாக இருக்கின்றான்.) நபிமொழி – அறிவிப்பாளர்
அபூ மூஸா அல்அஷ்அரி – நூல் முஸ்லிம்.
அல்லாஹ் அடியார்கள்
மீது அளிவில்லா இரக்கமுள்ளவன். பாவங்கள் செய்தவர்களை தண்டிப்பதற்கு அவசரப்படாமல், மன்னிப்பதற்கான
சந்தர்ப்பங்களை ஏற்படுத்தியுள்ளான். மேலும் அடியான் தன்னிடம் பாவமன்னிப்புக் கோரும்
போது அல்லாஹ் அளவில்லா மகிழ்ச்சியடைகின்றான்.
எவர் தவ்பா செய்து
விமோசனமடைகின்றாரோ அவர் ஈருலகிலும் ஈடேற்றமடைவார். தவ்பா எனும் சந்தர்ப்பத்ததை தவறவிட்டவர், தான் சம்பாதித்துக்கொண்டவைகளுக்காக
அல்லாஹ்வால் தண்டிக்கப்படுவான்.
·
18:49. உம்முடைய இறைவன்
ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
அல்லாஹ் அருளாளன் என்பதற்க்கு அவனது அழகிய திருநாமங்களையே சான்றாகக்
கொள்ளலாம். அதேநேரத்தில் அவன் அனைத்துக்கும் சக்தியுள்ளவன்.
·
30:50. (நபியே!) அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் (இத்தகைய) அத்தாட்சிகளைச்
சிந்தித்துப் பார்ப்பீராக! (வரண்டு) மரித்த பிறகு பூமியை அவன் எவ்வாறு உயிர்ப்பிக்கிறான்?
(இவ்வாறே) மரித்தவர்களையும் அவன் நிச்சயமாக உயிர்ப்பிபவனாக இருக்கிறான்; மேலும் அவன்
எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்.
அல்லாஹ்வுடைய திருநாமங்களில் ஒன்று தவ்வாப் ...
·
42:25. அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை - பாவ மன்னிப்புக்
கோறுதலை - ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள்
செய்வதை அவன் நன்கறிகிறான்.
பாவிகளை தண்டிக்க வல்லமை இருந்தும் அவனது அருளால் மன்னித்து
அருள் புரிகின்றான்.
·
(நிச்சயமாக அல்லாஹ் அவனிடத்தில் அர்ஷுக்கு மேல் '' நிச்சயமாக
எனது அருள் எனது கோபத்தை விட முந்திவிட்டது'' என எழுதியுள்ளான்.) நபிமொழி.
பாவமன்னிப்பு என்பது சில பாவங்களை முன் வைத்து, அவற்றிக்காக
மன்னிப்புக் கேட்பது.. மன்னிப்பு கேட்கப்படாதவைகள், மன்னிப்புக் கேட்கும் வரை எஞ்சியிருக்கும்.
தவ்பாவுடைய வாயில் சூரியன் மேற்கில் உதமாகும் காலம் வரை திறந்திருக்கும். அதற்குப்பின்
தவ்பாவின் வாயில் மூடப்படும். அதற்குப்பின் எந்தப்பயனுமில்லை.
தவ்பாவுக்கான பிரமாண்டமான பிரதிபலனை அல்லாஹ் வழங்குவதாக வாக்களித்துள்ளான்.
·
9:112. மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள்,
(அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள். ஸுஜூது செய்பவர்கள்
(தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள், அல்லாஹ்வின்
வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர்
நன்மாராயம் கூறுவீராக!
·
66:8. ஈமான் கொண்டவர்களே! கலப்பற்ற (மனதோடு) அல்லாஹ்விடம் தவ்பா
செய்து, பாவமன்னிப்புப் பெறுங்கள்; உங்கள் இறைவன் உங்கள் பாவங்களை உங்களை விட்டுப்
போக்கி உங்களைச் சுவனச் சோலைகளில் பிரவேசிக்கச் செய்வான்; அவற்றின் கீழே ஆறுகள் (சதா)
ஓடிக் கொண்டே இருக்கும்; (தன்) நபியையும் அவருடன் ஈமான் கொண்டார்களே அவர்களையும் அந்நாளில்
அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (அன்று ஈடேற்றம் பெற்ற) அவர்களுடைய பிரகாசம் (ஒளி) அவர்களுக்கு
முன்னும் அவர்களுடைய வலப்புறத்திலும் விரைந்து கொண்டிருக்கும்; அவர்கள் 'எங்கள் இறைவா!
எங்களுக்கு, எங்களுடைய பிரகாசத்தை நீ முழுமையாக்கி வைப்பாயாக! எங்களுக்கு மன்னிப்பும்
அருள்வாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன்' என்று கூறி(ப்
பிரார்த்தனை செய்து) கொண்டு இருப்பார்கள்.
·
25:68. அன்றியும், அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு நாயனைப் பிரார்த்திக்கமாட்டார்கள்;
இன்னும் அல்லாஹ்வினால் விலக்கப் பட்ட எந்த மனிதரையும் அவர்கள் நியாயமின்றிக் கொல்லமாட்டார்கள்.
விபசாரமும் செய்ய மாட்டார்கள் – ஆகவே, எவர் இவற்றைச் செய்கிறாரோ, அவர் தண்டனை அடைய
நேரிடும்.
·
25:69. கியாம நாளில் அவருடைய வேதனை இரட்டிப்பாக்கப்படும்; இன்னும்
அதில் இழிவாக்கப்பட்டவராக என்றென்றும் தங்கிவிடுவர்.
·
25:70. ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு,
ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான்.
மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான்.
·
( ஒரு மனிதன்,பாலைவனத்தில் தனது வாகனம் உணவு,தண்ணீர் ஆகியவற்றைத்
தொலைத்து, களைப்பில் ஒரு மரத்தின் கீழ் உறங்கி எழும்போது, அவனது வாகனம் கண்முன்னே காட்சியளித்தால்
எவ்வளவு மகிழ்ச்சியடையவானோ, அதை விட பண்மடங்கு தனது அடியான் தன்னிடம் தவ்பா செய்யும்
போது மகிழ்ச்சியடைகின்றான். ) நபிமொழியிலிருந்து... முஸ்லிம்.
ஒரு அடியானின் நாட்களின் சிறப்புகுரிய நேரம் என்னவெனில் அவன் தவ்பாசெய்யக்கூடிய நாளாகும். ஏனெனில் பாவத்துக்கான
தவ்பா இன்றி இருப்பது ஒரு மையித்தைப்போன்றாகும். தவ்பா செய்யும் போது அவன் உயிர் பெறுகின்றான்.
தவ்பா என்பது மிகவும் சிறப்புகுரிய வணக்கமாகும். இதை நபிமார்கள்,
ரஸுல்மார்கள், இறைநேசர்கள், ஸாலிஹீன்கள் பற்றிப்பிடித்துக்கொண்டார்கள்.
·
9:117. நிச்சயமாக
அல்லாஹ் நபியையும், கஷ்ட காலத்தில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்களையும் அன்ஸாரிகளையும்
மன்னித்தான். அவர்களில் ஒரு பிரிவினருடைய நெஞ்சங்கள் தடுமாறத் துவங்கிய பின்னர் அவர்களை
மன்னித்(து அருள் புரிந்)தான் - நிச்சயமாக அவன் அவர்கள் மீது மிக்க கருணையும். கிருபையும்
உடையவனாக இருக்கின்றான்.
நபி இப்ராஹீம் ,இஸ்மாஈல் அலைஹிமஸ்ஸலாம் அவர்களைப்பற்றி அல்லாஹ்
கூறுகையில் ...
·
2:128. 'எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும்
வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக; எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும்
ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை) ஆக்கி வைப்பாயாக; நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும்
அறிவித்தருள்வாயாக; எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக
நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.'
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப்பற்றி கூறுகையில் ...
·
7:143 அவர் தெளிவடைந்ததும் '(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்;
நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்'
என்று கூறினார்.
ஒரு முஸ்லிம் எந்நேரமும்
தவ்பாவின் பால் கட்டாயத் தேவையுடையவர்களாக உள்ளனர்.
ஸ்திரமாக இருந்தாலும்,
பொடுபோக்காக இருந்தாலும் தவ்பாவின் பால் தேவையுடையவர்களாக உள்ளனர்.
நல்லமல்களின் பின்னும்,
தவறுகள் ஏற்பட்டபின்னும் தவ்பாவின்பால் தேவையுடையவர்களாக உள்ளனர்.
பாவங்கள் இரகசியமக
இருந்தாலும், பகிரங்கமாக இருந்தாலும் அவைகளனைத்துக்கும் அவசரமாக மன்னிப்புக்கோரல் வேண்டும்.
அத்துடன் தொடர்ந்து நன்மையின் பால் நிலைத்திருத்தல் வேண்டும்.
ஷைத்தானுடைய விளையாட்டுக்களாலும்
உலக மமதையினாலும்; நாளை நாளை என தவ்பாவை விட்டும் தூரமாவதை எச்சரிக்கையுடன் தவிர்ந்து
கொள்ளுங்கள்.
எத்தனையோ மனிதர்கள்
தனக்குத்தானே அநியாயம் செய்து கொண்டவர்கள் இறுதியில் தவ்பா எனும் பாவமன்னிப்பினால்
ஈடேற்றமடைந்திருக்கின்றார்கள்.
தவ்பா எனும் பாவமன்னிப்பான உயரிய வணக்கத்தைச் செய்து ஈடேற்றமடைந்தவர்களாக
அல்லாஹ் எம்மனைவரையும் ஆக்கிவைப்பானாக. ஆமீன் !!!
0 comments:
Post a Comment