20 ஷவ்வால் 1433 ஹி (அ) 07 செப்டம்பர் 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்…
இடம்      : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு   : அல்குர்ஆன்,அஸ்ஸுன்னா வில் ஆது சமூகத்தின் வரலாறு.
இமாம்     : அப்துல் முஹ்ஸின் முஹம்மத் அல்காஸிம்.
இமாம் அவர்கள்   அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வில் ஆது சமூகத்தைப் பற்றி வரக்கூடிய வரலாறுகளை எடுத்துக்கூறி ஈருலகிலும் அநியாயத்துக்கான தண்டணை மிகவும் கடுமையானது என்பதை விளக்கிக்கூறினார்கள்.


 அல்லாஹ் மனிதர்களைப் படைத்து அம்மனிதர்கள் அவனது கட்டளைகளை எடுத்து, அவன் தடுத்தவற்றை தவிர்ந்து  அவனை மாத்திரமே வணங்க வேண்டுமென்பதை கட்டாயப்படுத்தியுள்ளான். மேலும் மனிதர்கள் அவர்களுக்கு மத்தியில் நேர்மையாக நடந்து கொள்வதோடு அநியாயம், கெடுதி செய்தலை முற்றுமுழுதாக தவிர்ந்து கொள்ள வேண்டுமென பணித்துள்ளான். இவ்வாறு ஏவல்கள் ,தடைகள், ஆர்வமூட்டல், எச்சரிக்கை செய்தல் போன்றவைகளை அல்குர்ஆனில் கூறியுள்ளதோடு படிப்பினை பெறவேண்டும் என்பதற்காக பல வரலாறுக (கதைக) ளையும் கூறியுள்ளான். 

சென்றகால, சமகால, எதிர்கால சந்ததியினரில் அல்லாஹ்வுக்கு மாறு செய்து எல்லை மீறியவர்களுக்கான அல்லாஹ்வின் தண்டனையில் மாற்றமேதுமிருக்காது.

o   33:62. அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர்

சக்தியிலும், அநியாயத்திலும் எல்லை மீறிய ஒரு சமூகத்தின் வரலாறை அல்குர்ஆனில் அவர்களுடைய தூதரின் பெயரில் ஸுரா அல்ஹுத் என்றும் அவர்களது இருப்பிடத்தின் பெயரில் ஸுரதுல் அஹ்காப் என்ற பெயரிலும் கூறியுள்ளான்.

அவர்களது காலத்தில் படைப்பால் பிரமாண்டவர்களாகவும், உடலால் நீளமானவர்களாகவும், மிகவும் கடினமானவர்களாகவும் இருந்தனர்.
o   7:69. நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள்.)
o   89:8. அவர்கள் போன்ற ஒரு சமுதாயம் எந்த நாடுகளிலும் படைக்கப்படவில்லை.
o   89:6. உம்முடைய இறைவன் ஆ(து கூட்டத்)தை என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா?

அவர்களது இருப்பிடங்கள் உன்னதமான பல தூண்களையுடைய அழகான கட்டிடங்களாகும்.
o   89:7. (அவர்கள்) தூண்களையுடைய 'இரம்' (நகர) வாசிகள்

 தங்களது சக்தியின் வெளிப்பாடாக  அவர்களுடைய கட்டிடங்களை பிரமாண்டமாக  அழகுபடுத்துவதற்காக தேவையற்ற உடல் உள சிரமங்களை எடுத்துக்கொள்வதை அவர்களது தூதர் எச்சரித்ததும் அவர்களுக்கு பயனளிக்கவில்லை.
o   26:128. 'நீங்கள் ஒவ்வோர் உயரமான இடத்திலும் வீணாக சின்னங்களை நிர்மாணிக்கின்றீர்களா?
o   26:129. இன்னும் நீங்கள் நிரந்தரமாக இருப்போம் என்று (அழகிய வேலைப்பாடுகள் மிக்க) மாளிகைகளை அமைத்துக் கொள்கின்றீர்களா?

அல்லாஹ் அவர்களுக்கு உணவிலும், செல்வத்திலும், குழந்தைப் பாக்கியத்திலும்  பல அபிவிருத்திகளையும் கொடுத்தான்.
o   26:133. 'அவன் உங்களுக்கு (ஆடு ,மாடு, ஒட்டகை போன்ற) கால்நடைகளையும் பிள்ளைகளையும் கொண்டு உதவியளித்தான்.
o   26:134. 'இன்னும் தோட்டங்களையும் நீரூற்றுக்களையும் (கொண்டு உதவியளித்தான்).

இவைகளின் மூலம் அல்லாஹ்வின் அருளை நினைவுகூர்ந்து ஈருலகிலும் ஈடேற்றம் பெறுமாறு அவர்களது தூதர் போதித்தார்.
இவ்வளவு அருள்களை வழங்கியும் அவர்கள் கர்வம் கொண்டவர்களாக நபியின் போதனையை புறக்கணித்து சிலைகளை வணங்கிக் கொண்டிருந்தார்கள்.   தூபான் எனும் வெள்ள அழிவுக்குப்பின் சிலைகளை வணங்கிய முதல் சமூகம்  ஆது சமூகமாகும்.
o   7:69. 'உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிக மாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்' (என்றும் கூறினார்) 

நபி ஹுத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது சமூகத்தாரை சிலைவணக்கத்தை விட்டு ஓரிறைக் கொள்கையின்பால் அழைப்பு விடுத்தார்கள்.
o   7:65. இன்னும் ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர் 'என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?' என்று கேட்டார்.

ஆது கூட்டத்தினர் நபியவர்களை குறைத்து மதிப்பிட்டு எல்லைமீறி இறைநிராகரிப்பில் உறுதியாக இருந்தார்கள்.
o   11:54. 'எங்களுடைய தெய்வங்களில் சில கேட்டைக் கொண்டும் உம்மைப் பிடித்துக் கொண்டன என்பதைத் தவிர நாங்கள் (வேறு எதுவும்) கூறுவதற்கில்லை'
o   7:66. அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள் (அவரை நோக்கி) 'நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக் கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்' என்று கூறினார்கள்.
o   11:53. (அதற்கு) அவர்கள்: 'ஹூதே! நீர் எங்களிடம் எவ்வித அத்தாட்சியும் கொண்டு வரவில்லை; உம்முடைய சொல்லுக்காக எங்கள் தெய்வங்களை நாங்கள் விட்டு விடுபவர்களும் அல்லர் - நாங்கள் உம் மேல் (ஈமான்) கொள்கிறவர்களும் அல்லர்' என்று (பதில்) கூறினர்.
o   26:136. (இதற்கு) அவர்கள்: 'நீர் எங்களுக்கு உபதேசம் செய்தாலும் அல்லது நீர் எங்களுக்கு உபதேசம் செய்பவராக இல்லாதிருப்பினும் (இரண்டுமே) எங்களுக்கு சமம்தான்' எனக் கூறினார்கள்.
o   23:33. ஆனால் அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதித் தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும் நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சுகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும் (தம் சமூகத்தாரிடம்) 'இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை; நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்…..

அவர்களுடைய நபி மலக்குமார்களில் ஒருவராக இருக்க வேண்டுமென எதிர்பார்த்ததுடன், மறுமை மற்றும் மீள் எழுப்பப்படுதல் போன்றவற்றையும் மறுத்தனர். மேலும்  வலுவற்றவர்களுக்கு அநியாயம் செய்து , படைப்பாளனுக்கு மற்றும் படைக்கப்பட்டவைகளுக்கு செய்யவேண்டிய கடமைகள்  அனைத்தையும் புறக்கணித்து வாழ்ந்தார்கள்.
o   41:14. 'எங்கள் இறைவன் நாடியிருந்தால் அவன் மலக்குகளை (த் தூதர்களாக) இறக்கியிருப்பான். ஆகவேதான் நீங்கள் எதனைக் கொண்டு அனுப்பப்பட்டிருக்கிறீர்களோ அதனை நாங்கள் நிச்சயமாக நிராகரிக்கிறோம்' என்று சொன்னார்கள்.
o   23:35. 'நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?
o   23:36. '(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது வெகு தொலைவு ,வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)
o   26:130. 'இன்னும் நீங்கள் (எவரையும் ஏதுங் குற்றங்களுக்காகப்) பிடித்தால் மிகவும் கொடியவர்கள் போல் பிடிக்கின்றீர்கள்.
o   11:59. (நபியே!) இதோ ஆது கூட்டத்தினர் - அவர்கள் தங்கள் இறைவனின் அத்தாட்சிகளை நிராகரித்து அவனுடைய தூதர்களுக்கும் மாறு செய்தார்கள். ஒவ்வொரு பிடிவாதக் கார வம்பர்களின் கட்டளையையும் பின்பற்றினார்கள்.

நபியையும் அவர்களுடைய போதனைகளையும் ஏளனம் செய்தார்கள்.
o   46:22. அதற்கு அவர்கள்: 'எங்களுடைய தெய்வங்களை விட்டும் எங்களைத் திருப்பி விட நீர் எங்களிடம் வந்தீரா? நீர் உண்மையாளராக இருந்தால் நீர் எதைக் கொண்டு எங்களை பயமுறுத்துகிறீரோ அ(வ் வேதனையான)தைக் கொண்டு வாரும்' என்று கூறினார்கள். 

இத்தகைய ஆது கூட்டதினருக்கு வழங்கப்பட்ட  தண்டணைகள்.

Ø  அவர்கள் அறியாதவாறு வேதனை படிப்படியாக வந்தது.

Ø  மழை நீர் இல்லாமல் பூமி உலர்ந்து வறண்டு போனது.

Ø  பள்ளத்தாக்கை நோக்கி மழைமேகம் வருவதைப் பார்த்து அது வேதனை என்பதை உணராமல் மகிழ்வுற்றனர்.

Ø  ஏழு இரவுகளும், எட்டு பகல்களும்; தொடரான இடைவிடாத கடும் புயல் காற்று அதிர்ச்சியூட்டும் சத்தங்களுடன் வீசியது.

Ø  ஈருலகிலும் அல்லாஹ்வுடைய சாபத்தைப் பெற்றுக் கொண்டனர்.

Ø  படிப்படியாக வேதனைகள் வந்து இறுதியில் ஒட்டுமொத்தமான வேதனையை எத்திக் கொண்டார்கள்.

o   46:24. ஆனால் அவர்களோ (அவர்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) அவர்கள் இருந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும் 'இது நமக்கு மழையைப் பொழியும் மேகமாகும்' எனக் கூறினார்கள்; 'அப்படியல்ல இது நீங்கள் (எதற்காக) அவசரப்பட்டீர்களோ அதுதான்; (இது கொடுங்)காற்று - இதில் நோவினை செய்யும் வேதனை இருக்கிறது:
o   46:25. 'அது தன் இறைவனின் கட்டளையினால் எல்லாப் பொருட்களையும் அழித்துவிடும்' (என்று கூறப்பட்டது). பொழுது விடிந்த போது (அழிக்கப்பட்ட அவர்களுடைய) வீடுகளைத் தவிர (வேறு) எதுவும் காணப்படவில்லை - இவ்வாறே குற்றம் செய்யும் சமூகத்திற்கு நாம் கூலி கொடுக்கிறோம்.
o   51:42. அ(க்காற்றான)து தன் எதிரில் பட்டதையெல்லாம் தூள் தூளாக்காமல் விடவில்லை.
o   69:7. அவர்கள் மீது அதை ஏழு இரவுகளும், எட்டுப் பகல்களும் தொடர்ந்து வீசச் செய்தான்; எனவே அந்த சமூகத்தினரை அடியுடன் சாய்ந்துவிட்ட ஈச்சமரங்களைப் போல் (பூமியில்) விழுந்து கிடப்பதை (அக்காலை நீர் இருந்திருந்தால்) பார்ப்பீர்.

அவர்களது சம்பவம் பின்வரும் எல்லா சமுகத்துக்கும் படிப்பினையாகும்.
o   41:16. ஆதலினால் இவ்வுலக வாழ்வில் அவர்கள் இழிவு தரும் வேதனையைச் சுவைக்கும்படிச் செய்ய கெட்ட நாட்களில் அவர்கள் மீது ஒரு கொடிய புயல் காற்றை அனுப்பினோம்; மேலும் மறுமையிலுள்ள வேதனையோ மிகவும் இழிவுள்ளதாகும்; அன்றியும் அவர்கள் (எவராலும்) உதவி செய்யப்பட மாட்டார்கள்.

நாம் பெற வேண்டிய படிப்பினைகள்
ஆது சமுகம் வீண் பெருமை கொண்டதின் காரணமாக அல்லாஹ் அவர்களை காற்றின் மூலம் படிப்படியாக அழித்தான்.
அல்லாஹ்விடமே உதவி வேண்டுவது என்பது நபிமார்களின் உயரிய பண்பாகும். இதனால் காற்றின் மூலம் அல்லாஹ் உதவிசெய்தான்.
o   41:15. அன்றியும் ஆது(க் கூட்டத்தார்) பூமியில் அநியாயமாகப் பெருமையடித்துக் கொண்டு 'எங்களை விட வலிமையில் மிக்கவர்கள் யார்?' என்று கூறினார்கள் - அவர்களைப் படைத்த அல்லாஹ் நிச்சயமாக அவர்களை விட வலிமையில் மிக்கவன் எனபதை அவர்கள் கவனித்திருக்க வில்லையா? இன்னும் அவர்கள் நம் அத்தாட்சிகளை மறுத்தவாறே இருந்தார்கள்.
o   19:84. எனவே அவர்களுக்காக நீர் அவசரப்படாதீர்! அவர்களுக்கு (வேதனைக்குரிய தவணையின்) கணக்கை நாம் கணக்கிட்டுக் கொண்டுதானிக்கிறோம்.
o   23:26. 'என் இறைவா! இவர்கள் என்னை பொய்ப்பிப்பதின் காரணமாக நீ எனக்கு உதவி புரிவாயாக!' என்று கூறினார்.

நாம் முழுமையான நம்பிக்கை (தவக்குல்) அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டும்.

பாவமன்னிப்பு (தவ்பா) அதிகமாக கேட்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய உதவிகள் தாமதமாகும் போது முஃமின் தடுமாற்றமடையக்கூடாது. அது அல்லாஹ்வுடைய ஞானத்தில் உள்ளதாகும்.

அல்லாஹ்வுடைய வேதனையை மனித சக்தியால் ஒருபோதும் எதிர்கொள்ளமுடியாது.

உதவி பொறுமையுடனும், இலேசு சிரமத்துடனும் உள்ளது. 

-    11:56. நிச்சயமாக நான் எனக்கும் உங்களுக்கும் இறைவனாக இருக்கும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.
-    11:52. 'என்னுடைய சமூகத்தார்களே! நீங்கள் உங்களுடைய இறைவனிடம் பிழை பொறுக்கத் தேடுங்கள்; இன்னும் (தவ்பா செய்து) அவன் பக்கமே மீளுங்கள்; அவன் உங்கள் மீது வானத்திலிருந்து தொடராக மழையை அனுப்புவான்; மேலும் உங்களுடைய வலிமையுடன் மேலும் வலிமை பெருகச் செய்வான் - இன்னும் நீங்கள் (அவனைப்) புறக்கணித்துக் குற்றவாளிகளாகி விடாதீர்கள்' (என்றும் எச்சரித்துக் கூறினார்).
-    30:47. பிறகு (அத்தூதர்களை பொய்ப்பிக்க முற்பட்ட) குற்றவாளிகளிடம் பழி வாங்கினோம் - மேலும் முஃமின்களுக்கு உதவி புரிதல் நம் கடமையாகும்.
-    13:11. மனிதனுக்கு முன்னாலும் பின்னாலும் தொடர்ந்து வரக்கூடிய (மலக்குகள்) இருக்கிறார்கள். அல்லாஹ்வின் கட்டளையால் அவர்கள் அவனைப் பாதுகாக்கிறார்கள்; எந்த ஒரு சமூதாயத்தவரும் தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில் அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால் அதைத்தடுப்பவர் எவருமில்லை - அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை.
-    12:111. (நிச்சயமாக) அவர்களின் வரலாறுகளில் அறிவுடையோருக்கு (நல்ல) படிப்பினை இருக்கிறது; இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கவில்லை. மாறாக இதற்கு முன் உள்ள (வேதத்)தையும் இது உண்மையாக்கி வைக்கிறது. ஒவ்வொரு விஷயத்தையும் இது விவரித்துக் காட்டுவதாகவும், நம்பிக்கை கொண்ட சமூகத்தவருக்கு நேர்வழியாகவும், ரஹ்மத்தாகவும் இருக்கிறது. 

சில அறிவுரைகள்

மனித அறிவுறைகளில் மிகவும் சிறப்பானது அல்லாஹ்வை மாத்திரமே கலப்படமற்ற முறையில் வணங்கி வழிபடுமாறு அறிவுரை வழங்குவதாகும்.

நன்றி மறந்தவன் பாவியாவான்.

அநியாயக்காரன் எல்லை மீறுவது அவனது அழிவின் அடையாளமாகும். உதாரணமாக பூமியில் மிகவும் கெடுதி செய்த பிர்அவ்னின் அழிவு.

அல்லாஹ்வுடைய வேதனைகள் அருள் போன்ற வடிவிலும் வரும்.

எதுவானாலும் அல்லாஹ்வுடைய அருளைக்கேட்டு அவனது வேதனையை விட்டும் பாதுகாப்புக் கோரவேண்டும்.
o   17:16. நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால் அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப் படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது அவ்வூரின் மீது (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால் நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம். 

அல்குர்ஆன் கூறும் வரலாறுகள் மூலம் படிப்பினை பெற்றவர்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக. ஆமீன்  !!!

0 comments:

Post a Comment

 
Top