06 ஜூலை 2012 , 16 ஷஃபான் 1433 ஹி அன்று புனித மஸ்ஜிதுந்நபவி யில் நடந்த ஜும்ஆ குத்பாவின் கருத்துக்களின் சாராம்சம்.
இடம் :
மஸ்ஜிதுந்நபவி மதீனா முனவ்வரா
தலைப்பு : ரமழான் மாத படிப்பினைகள்
கதீப் : இமாம் அப்துல் முஹ்ஸின் அல்காஸிம்
இந்த குத்பாவில் இமாம் அப்துல் முஹ்ஸின் அல்காஸிம் அவர்கள் புனித ரமழான் மாதத்தின் சிறப்புகளையும் அதில் அல்லாஹ் தனது அடியார்களுக்கு ஏற்படுத்தியுள்ள பல நன்மைகள்,சிறப்புகள் பற்றியும்
கூறினார்கள். மேலும் இம்மாதத்தில் செய்யப்படும் நல் அமல்களுக்கான கூலி வழங்குவதின் இரட்டிப்பு பற்றி
ஞாபகமூட்டினார்கள். நோன்பு, தொழுகை, இரவில்
நின்று வணங்குதல், அல்குர்ஆன் ஓதுதல் போன்ற
வணக்கங்களை ஆர்வமூட்டினார்கள்
அல்லாஹ்வை வணங்குதல்
மனிதவர்க்கத்தையும் ஜின் வர்க்கத்தையும் தன்னை வணங்குவதற்காக அல்லாஹ் படைத்துள்ளான். அவன் எவ்வித தேவையுமற்றவன். அனைவருக்கும் தேவையானவன். அவன் தீங்குகளை இல்லாமல் செய்து பயனளிப்பவன். எனவே அவர்களது தேவைகளின் நிமித்தம் அவர்களுக்கு வணக்கத்தை கடமையாக்கியுள்ளான். புனித அல்குர்ஆனில் முதல் ஏவலாக அமைந்திருப்பது அவனை வணங்குவது பற்றியேயாகும் .
இது பற்றி அல்குர்ஆனில்
வரும் சில வசனங்கள்-
மனிதர்களுக்கு:
·
அல்குர்ஆன் 2:21. மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும்; தூய்மையும்) உடையோராகலாம்.
தூதர்களுக்கு :
·
அல்குர்ஆன் 23:51. (நம் தூதர்கள் ஒவ்வொருவரிடத்திலும்:) 'தூதர்களே! நல்ல பொருள்களிலிருந்தே நீங்கள் உண்ணுங்கள்; (ஸாலிஹான) நல்லமல்களை செய்யுங்கள்; நிச்சயமாக நீங்கள் செய்பவற்றை நான் நன்கு அறிபவன்....
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு :
·
அல்குர்ஆன் 20:14. 'நிச்சயமாக நாம் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை; ஆகவே
என்னையே நீர் வணங்கும். என்னை தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக.
முஹம்மத் நபி ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்களுக்கு:
·
அல்குர்ஆன் 39:66. ஆகவே நீர் அல்லாஹ்வையே வணங்குவீராக! மேலும் அவனுக்கு நன்றி செலுத்துபவர்களில் நின்றும் இருப்பீராக!
பனூஇஸ்ரவேலர்களிடம்:
·
அல்குர்ஆன் 2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில்
'அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது…….
குறைஷிகளுக்கு:
·
அல்குர்ஆன் 106:3. இவ்வீட்டின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.
இறைவிசுவாசிகளுக்கு :
·
அல்குர்ஆன் 22:77. ஈமான் கொண்டவர்களே! நீங்கள் ருகூஃ செய்யுங்கள்; இன்னும் ஸஜ்தாவும் செய்யுங்கள்; இன்னும் உங்கள் இறைவனை வணங்குங்கள்; மேலும் நீங்கள் வெற்றி பெரும் பொருட்டு
நன்மையே செய்யுங்கள்.
நபித்தோழர்களுடைய பண்புகள் பற்றி கூறுகையில் :
·
அல்குர்ஆன் 48:29.. ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை
நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்.
அல்லாஹ்வுக்கு உன்மையான அடியானாக இருப்பது மிகவும் சிறப்புக்குரியதாகும் இதனால்தான் ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் பிராத்தித்தார்கள்.
·
அல்குர்ஆன் 27:19. இன்னும் உம் கிருபையைக் கொண்டு என்னை உன்னுடைய நல்லடியார்களில் சேர்த்தருள்வாயாக!' என்று பிரார்த்தித்தார்.
நபியவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தும்போது '
ஒரு அடியான் சொல்லும் வார்த்தைகளில் சொல்வதற்கு மிகவும் பொருத்தமானது (யா அல்லாஹ்) நாம் அனைவரும் உனது அடிமைகளே ! என்பதாகும்“ என கூறுவார்கள். நபிமொழி முஸ்லிம்
மேலும் நபியவர்கள் பர்ளான ஒவ்வொரு தொழுகைக்குப்பின்னும்
((அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னி இபாததிக))
(யா அல்லாஹ் ! உன்னை நினைவு கூர்வதற்கும், உனக்கு நன்றியுடையவனாக இருப்பதற்கும், உன்னை அழகிய முறையில் வணங்கிவழிபடவும் எனக்கு நீ உதவி செய்வாயாக ! என பிராத்திப்பார்கள். நபி மொழி அபூதாவூத்.
ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் பர்ளான தொழுகைகளில் 17 விடுத்தம்
·
அல்குர்ஆன் 1:5. ”(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.;''
எனக்கூறி இவ்வணக்கத்தை நிலைநிறுத்தி அல்லாஹ்வுடன் உடன்படிக்கை செய்கிறார்கள்.
எவர் இந்த வணக்கத்தை நிலைநிறுத்தி வழிபடுகிறாரோ அவர் நாளை மறுமையில் அர்ஷின் கீழ் நிழல் பெருவார்.
சுவர்க்கத்தில் நுழைவதற்கான காரணி இறைவணக்கம் மாத்திரமே !
அல்லாஹ் தன் அடியார்கள் மீது செய்துள்ள சிறப்புக்களில் ஒன்றுதான் வணக்கத்தைப் போதித்து அதனை நிறைவேற்றும் வழிமுறைகளை தூதர்கள் மூலம் தெளிவுபடுத்தினான்
·
அல்குர்ஆன் 24:54. 'அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள்' என்று (நபியே!) நீர் கூறுவீராக.
வணக்கங்கள் கலப்படமற்ற தூய்மையான எண்ணத்துடனும் நபியவர்களது வழிகாட்டலுக்கும் உட்பட்டதாக இருக்கும்போது அவ்வணக்கத்தை ஏற்று அந்தஸ்துகளை உயர்த்துகிறான்.
·
அல்குர்ஆன் 35:10. தூய்மையான வாக்குகளெல்லாம் அவன் பக்கமே மேலேறிச் செல்கின்றன; ஸாலிஹான (நல்ல) அமலை எல்லாம் அவன் உயர்த்துகிறான்.
அல்லாஹ் முஹம்மது நபியின் சமுகத்துடைய வாழ்நாளை (60—70 வயதிற்க்கு இடைப்பட்டதாக)க்குறைத்துள்ளான்.ஆனால் இக்குறையை அமல்களுக்கான நன்மைகளை பன்மடங்காக மாற்றக்கூடிய பல சந்தர்ப்பங்களை வழங்குவதன் மூலம் அல்லாஹ் நிவர்த்தி செய்துள்ளான்.
ரமழான்
மாதமும் , அமல்களும்
அல்லாஹ் வருடத்தின் ஏனைய மாதங்களைவிட ரமழான் மாதத்தை சிறப்பாக்கி அவனது தூதரை அனுப்பி அல்குர்ஆனையும் இறக்கிவைத்தான். பூரண உள மகிழ்ச்சியுடன் இஸ்லாமிய கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்க ஆவலுடன் முஸ்லிம்களால் இம்மாதம் வருடாவருடம் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்மாதத்தில் வானவர்கள் இறங்கக்கூடிய , அருள் புரியப்பட்ட ஒரு இரவில் (லைலதுல் கத்ர்) செய்யப்படக்கூடிய அமல்கள் ஆயிரம் மாதங்களைவிட சிறப்புகுரியதாகவும் ,அதில்
வழிபடுவதின் மூலம்
நன்மைகளைக் கொள்ளையடிக்கப் போட்டியிடக்கூடிய மைதானமாகவும் ஆக்கியுள்ளான்.
நோன்புநோற்றல்:
·
எவர் விசுவாசத்துடன் நன்மையை நாடியவராக ரமழானில் நோன்பு நோற்கிறாரோ அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என நபியவர்கள் கூறினார்கள். புகாரி,முஸ்லிம்
இரவில் நின்று வணங்குதல்:
·
எவர் விசுவாசத்துடன் நன்மையை நாடியவராக ரமழான்மாத இரவில் நின்று
வணங்குகிறாரோ
அவரது முன்சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும் என நபியவர்கள் கூறினார்கள். புகாரி,முஸ்லிம்.
அல்குர்ஆன் ஓதுதல்:
இது இம்மாதத்தில் இறக்கப்பட்டது, இதை ஓதக்கூடியவர்களுக்கு பல நன்மைகள் காத்திருக்கிறது. இம்மாதத்திலே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வருகைதந்து நபியவர்களுடன் ஓதிக்கேட்கச்செய்தார்கள்.
துஆ அதிகமாகக்கேட்டல்:
·
(( மூன்று நபர்களுடைய பிரார்த்தனைகளை அல்லாஹ் நேரடியாக ஏற்றுக்கொள்வான்.1- நோன்பாளி நோன்பை திறக்கும் வரை 2- நீதியான தலைவர் 3- அநியாயம் இழைக்கப்பட்டவன்.)) நபி மொழி திர்மிதி.
·
அல்குர்ஆன் 2:186. (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; 'நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்; அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்; என்னையே நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்' என்று கூறுவீராக.
தர்மம் செய்தல்:
ரமழான் மாதம் ஏழை எழியோரின் மாதம். வருடாவருடம் அல்லாஹ்வுடைய அருளை வேண்டி மக்கள் இதை எதிர்பார்த்திருப்பார்கள். எனவே ஏழைகளை விரட்டிவிடவேண்டாம். கொடை பெருந்தன்மை மூலம்
வாரிவழங்குங்கள் .
நபியவர்கள் இம்மாதத்தில் பெரும்கொடையாளியாக இருப்பார்கள்.
·
அல்குர்ஆன் 34:39. ஆகவே நீங்கள் எந்தப் பொருளை (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்த போதிலும்இ அவன் அதற்குப் பிரதிபலன் அளிக்கிறான்; மேலும்இ அவன் கொடையாளிகள் அனைவரிலும் மிகவும் மேலானவன்' என்று (நபியே!) நீர் கூறும்.
தவ்பா செய்தல்:
பாவமன்னிப்புக் கோரக்கூடியவர்களுக்கான அரிய சந்தர்ப்பம். இம்மாதத்தில் நரகவாயில்கள் மூடப்படும்,சுவன வாயில்கள் திறக்கப்படும். எனவே உண்மையாக ரமழானில் பாவமன்னிப்புக்கோரி ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைநோக்கி பயனிக்கவேண்டும்.
நன்மைகளை அதிகப்படுத்துதல்:
நன்மையின் வாயில்கள் திறக்கப்படும். அது அவசரமாக மூடப்படும் எனவே காலம் தாழ்த்தாது முடியுமான நல்அமல்களைச்செய்து பயனடைய வேண்டும்.
பாவங்களைத்தவிர்த்தல்:
பொய், புறம்பேசுதல்,போன்ற தடுக்கப்பட்டவைகளை விட்டும் உறுப்புக்கள் அனைத்தையும் பாதுகாத்துக்கொள்ளல்.
பெண்கள் பள்ளிவாயில்களில் தொழுவதை விட வீட்டில் தொழுவதே சிறப்பானதாகும். பெண்கள் தன்னையும் இம்மாதத்தின் மகிமையையும் பாதுகாத்துக்கொள்ளல்வேண்டும்.
ஷஅபான்
மாதமும் , அமல்களும்
ஷஅபான் மாதத்தில் நபியவர்கள் அதிகமான நாட்கள் நோன்பு நோற்பார்கள்.
·
((ஷஅபான் மாதத்தில் அதிகமான நோன்பு நோற்பது போன்று வேறு எந்த மாதத்திலும் நோன்பு நோற்றதை நான் பார்த்ததில்லை என ஆயிஷா ரலியயல்லாஹுஅன்ஹா அவர்கள் அறிவிக்கிரார்கள்))புகாரி,முஸ்லிம்.
ஷஅபான் மாத ஆரம்பப்பகுதியில் நோன்பு நோற்பவர்கள் இறுதிப்பகுதியிலும் நோன்பு நோற்கலாம். இம்மாதத்தில் நோன்பு நோற்கும்
சிறப்புக்களைத்தவிர வேறு சிறப்புக்கள் (சிறப்புக்குறிய இரவு) ஏதும் இல்லை.
ஷஅபான் மாத நடுப்பகுதி இரவில் நின்று வணங்குதல் என்பதற்க்கு நபியவர்கள் அல்லது நபித்தோழர்கள் மூலமாக எந்த தெளிவான ஆதாரங்களும் இல்லை என
இப்னு ரஜப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிரார்கள்.
நேர்வழிகளில் மிகவும் சிறந்தது நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையே !
அருள்புரியப்பட்டவன் யாரெனில் தனது வணக்கங்களை அல்லாஹ்வுக்காக கலப்படமற்ற இக்லாஸ் எனும் தூய்மையான எண்ணத்துடனும் நபி முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய வழிமுறையையும் பின்பற்றுகிறவனாவான்.
புனித ரமழான் மாதத்தை அடைந்து
அதன் மூலம் பயனடைந்த மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக.
0 comments:
Post a Comment