08 ரமலான் 1433 ஹி   --- 27 ஜூலை 2012 அன்று கூறப்பட்ட சில முக்கிய கருத்துக்கள்.
இடம்       : மஸ்ஜிதுந்நபவி  மதீனா முனவ்வரா
தலைப்பு     : நோன்பின் சிறப்பும் பயன்களும்
கதீப்        :இமாம் அப்துல்முஹ்ஸின் இப்னு முஹம்மத் அல்காஸிம்.

ரமழான் மாதத்தின் சிறப்புக்களையும் அதில் நோன்பு நோற்றல்,நின்றுவணங்குதல் போன்றவற்றின் சிறப்புக்களையும் எடுத்துரைத்தார்கள்.


       அல்லாஹ் புனித இஸ்லாமிய மார்க்கத்தை அசைக்கமுடியாத உறுதியான தூண்களின் மீது நிலைப்படுத்தி அதில் நிறைவேற்றப்படவேண்டிய கடமைகளை வகைப்படுத்தியுமுள்ளான். நாள் தோறும் நிறைவேற்ற வேண்டியவை, வாராந்தோறும் நிறைவேற்றவேண்டியவை, வாழ்நாளில் ஒருவிடுத்தம் நிறைவேற்றவேண்டியவை, மற்றும் முஸ்லிமுடன் எந்நேரமும் உடன் இருக்கவேண்டியதாக இரு ஷஹாதாவை (அஷ்ஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹுவை) யும் கடமையாக்கியுள்ளான்.
      இந்த அடிப்படைத்தூண்கள் உடல், உள, உறுப்பு, பொருள் மூலம் நிறைவேற்றக்கூடிய அனைத்து வணக்கங்களும் அல்லாஹ்வுக்கு மாத்திரமே அமைய வேண்டுமென்பதை உறுதிப்படுத்தக்கூடியதாகவே உள்ளது.

o    6:162. நீர் கூறும்: 'மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும்.

o    6:163. 'அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). 

      இம்மாதத்தில் அல்குர்ஆனை அல்லாஹ் இறக்கிவைத்ததன்மூலம் நபி முஹம்மத் ஸல்லலாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு நுபுவ்வத் எனும் நபித்துவத்தைக் கொடுத்து முஸ்லிம்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டும், இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காகவும் ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை கடமையாக்கியுள்ளான்.
o    2:183. ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.

o    2:185. ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும்; (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது.

-தக்வா எனும் இறையச்சத்தின் அடிப்படை என்னவெனில் அனைத்துவிதமான அமல்களை (செயல்களை) யும் அல்லாஹ் ஒருவனுக்காகவே மாத்திரம் மட்டுப்படுத்திக்கொள்வதாகும்.இதற்கான நடைமுறைப்பயிற்ச்சியை நோன்பின் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் நோன்பின் மூலம் பெறக்கூடிய பயன்பாடுகளில் சில.....
-      பாவமன்னிப்பு.
-      நரக விடுதலை.
-      பாவத்தை விட்டும் பாதுகாக்கும் ஒரு கேடயம்.
-      உடலாரோக்கியம்.
-      தக்வா எனும் இறையச்சத்தினைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைப்பயிற்ச்சி.
-      இன்னும் ஏராளம் .............
o    57:21. உங்கள் இறைவனின் மன்னிப்பிற்கும் சுவர்க்கத்திற்கும் நீங்கள் முந்துங்கள்; அச்சுவர்க்கத்தின் பரப்பு வானத்தினுடையவும், பூமியினுடையவும் பரப்பைப் போன்றதாகும்; எவர்கள் அல்லாஹ்வின் மீதும்இ அவன் தூதர் மீதும் ஈமான் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அது சித்தம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது. அது அல்லாஹ்வுடைய கிருபையாகும் - அதனை அவன் நாடியவருக்கு அளிக்கின்றான். இன்னும் அல்லாஹ் மகத்தான கிருபையுடையவன். 
சிறப்புமிக்க மாதமான புனித ரமழானில் பூரணமான நன்மைகளைப் பெறக்கூடிய நன்மக்களாக நம்மை அல்லாஹ் ஆக்கிவைப்பானாக... ஆமீன்

0 comments:

Post a Comment

 
Top