நாள்        : 23 ஷஃபான் 1433 ஹி ---- 13 ஜுலை 2012

இடம்       : மஸ்ஜிதுந்நபவி  ---- மதீனா முனவ்வரா

தலைப்பு    : இஸ்லாமிய சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்

கதீப்                     : இமாம் ஹுஸைன்  அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க்

 

இமாம் ஹுஸைன்  அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷெய்க் அவர்கள்  இஸ்லாமிய சகோதரத்துவம், மற்றும் ஈமானிய உறவு ஆகிய இவை இரண்டும் இஸ்லாமிய உம்மாவின் தனிநபர் மற்றும் கூட்டு வாழ்கையில் அமைந்திருக்கவேண்டியதின் அவசியம் பற்றி அல்குர்ஆன்,அல்ஹதிஸ் ஆதாரங்களை முன்வைத்து பிரசங்கம் செய்தார்கள்.


முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாமிய, ஈமானிய சகோதரத்துவ உறவை, அன்பை கட்டியெழுப்புவது என்பது இஸ்லாமிய அடிப்படைக் காரணிகளில் ஒன்றாகும்.

·         நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே; ஆகவே உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு  நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அல்குர்ஆன் 49:10.

·         (( இறைவிசுவாசிகள் தங்களுக்கு மத்தியில் பரஸ்பர அன்பு, இரக்கம், கருணை காட்டுவதில் ஓர் உடலைப்போன்றவர்கள். உடலுறுப்பில் ஒரு உறுப்பு வேதனைப்படும் போது ஏனைய அனைத்து உறுப்புக்களும் விழித்திருந்து தடுமாற்றமடைவதைப் போன்றதாகும்)).----புகாரி, முஸ்லிம்

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் எடுத்து வந்த இஸ்லாமிய மார்க்கம் மக்களை ஒன்றிணைக்கும் மார்க்கமாகும். அதைவிட ஈமான் எனும் இறைவிசுவாசம் மிகப்பெரும் ஒன்றிணைப்பாகும்.  உண்மையான முஸ்லிம் என்பவன் தனது இஸ்லாமிய சகோதரனுக்காக பல்வேறு அர்த்தங்களை உள்ளடக்கிய பாசத்தை நெஞ்சில் சுமந்திருப்பான்.

·          முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அல்குர்ஆன் 9:71

·         (( தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை ஒருவன் பூரண இறைவிசுவாசியாக மாட்டான்.)) நபிமொழி

ஈருலகிலும் வெற்றிபெறுவதற்கான முக்கிய காரணிகளில் ஒன்று பிறர் தன்னுடன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமென ஒருவன் விரும்புகிறானோ அதேபோன்று  மற்ற முஸ்லிம்களுடன் அழகியமுறையில் நடந்துகொள்வதாகும்.

·         ( யார் நரகிலிருந்து விடுதலை பெற்று சுவர்க்கத்தில் நுழைய விரும்புகிறாரோ அவர் அல்லாஹ்வையும்,மறுமை நாளையும் விசுவாசித்து பிறர் தன்னுடன் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டுமென விரும்புகிறானோ அதேபோன்று மற்ற மனிதர்களுடன் அழகியமுறையில் நடந்துகொள்ளவேண்டும். ) முஸ்லிம். 

இது போன்ற நற்பண்புகள் முஸ்லிம்களுக்கு மத்தியில் பரவவேண்டும், மாற்றமான கெட்டபண்புகள் முஸ்லிம்களை விட்டும் விலகியிருக்க வேண்டும். இதற்காக பல சட்டவிதிகளை இஸ்லாம் வழங்கியிருப்பதை சர்வசாதாரணமாக காணலாம்.

·         ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். அல்குர்ஆன் 33:58.

·         (எங்களுக்கு எதிராக வாள் ஏந்துபவன்  எங்களைச்சார்ந்தவன் அல்ல)  -புகாரி, முஸ்லிம்.

இஸ்லாம் வழங்கியுள்ள சட்ட வரைமுறைகளை பின்பற்றாமல் தூரமாகுவதன் மூலம் முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய அருளை விட்டும் தூரமாவதை கண்கூடாக காண்கின்றோம்.

 இஸ்லாத்தின் எதிரிகள் இஸ்லாமியர்களுக்கு மத்தியில் குழப்பத்தையும், குரோதத்தையும்  ஏற்படுத்துவதெற்க்கென எல்லாக்காலங்களிலும் எல்லா இடங்களிலும் முயற்சித்துக்கொண்டிருப்பதைக் காணலாம்.

·         உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள். மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள்.  குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள்.  அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான். அல்குர்ஆன் 9:47.

எனவே முஸ்லிம்களே ! இஸ்லாம் கூறும் உணமையான இஸ்லாமிய சகோதரத்துவம், மற்றும் ஈமானிய உறவு மூலம் ஒன்றுபடுவோமாக.

இஸ்லாம் கூறும் நற்பண்புகளைப் பின்பற்றி அனைத்து கெட்டபண்புகளை விட்டும் விரண்டோடுவோமாக.  ஆமின்.

0 comments:

Post a Comment

 
Top